திருச்செந்தூர் கோவிலில் இலவசமாக பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்; பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இலவசமாக பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இலவசமாக பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது.
பக்தர்களுக்கு இலவச பிரசாதம்
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முதற்கட்டமாக நேற்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட 10 கோவில்களில் காணொலி காட்சி மூலம் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் கோவில்
பின்னர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். அதேபோல், கோவில் வடக்கு வாசலில் வைத்து தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இதனை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.
இந்த திட்டம் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, புட்டமுது, எலுமிச்சை சாதம், வெண்பொங்கல் ஆகிய 5 பிரசாதங்கள் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் வெங்கடேஷ், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் சுதாகர், செந்தில்குமார், மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story