உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி


உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 April 2022 9:58 PM IST (Updated: 23 April 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. திருவிழாவையொட்டி நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர்.

உடுமலை
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. திருவிழாவையொட்டி நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர்.
தேர்த்திருவிழா
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 5-ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 12-ந்தேதி கம்பம் நடுதல், 15-ந்தேதி கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி தினசரி மாலை, அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா வந்தார்.
20-ந்தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம், 21-ந்தேதி சுவாமியுடன் அம்மன் தேருக்கு எழுந்தருளல், மாலையில் தேரோட்டம் நடந்தது. தேர் திருவிருவிழாவையொட்டி உடுமலை குட்டைத்திடலின் ஒரு பகுதியில் தினசரி இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அத்துடன் கேளிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 
வாண வேடிக்கை
நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்பாள் பரிவேட்டைக்கு எழுந்தருளல் நடந்தது. குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் தளி சாலை, காந்தி சதுக்கம், பள்ளிவாசல் வீதி வழியாக குட்டைத்திடலுக்கு வந்தார். அங்கு மாபெரும் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. 
இது வானத்தில் வர்ண ஜாலம் போன்று இருந்தது. வாண வேடிக்கையை பார்ப்பதற்கு குட்டைத்திடலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நகராட்சிக்கு வெளிப்பகுதியில் வசிப்போர் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் வந்திருந்தனர். ஆனால் குட்டைத்திடல் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு குட்டைத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் மாலை முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
அதனால் கார்கள், வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே தூரத்தில் சாலையோரங்களில் நிறுத்தி விட்டு குட்டைத்திடல் பகுதிக்கு நடந்து வந்தனர். குட்டைத்திடல் பகுதி மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. அந்த பகுதியை சுற்றியுள்ள வீடுகளின் மொட்டை மாடிகளிலும் கூட்டம் இருந்தது. வாண வேடிக்கை நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். வாண வேடிக்கை நிகழ்ச்சி முடிந்ததும் அம்பாள் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
புஷ்ப பல்லக்கு சிறப்பு அலங்காரம்
நேற்று காலை கொடியிறக்கம் நிகழ்ச்சியும், பின்னர் மகா அபிஷேகமும் நடந்தது. இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்றுடன் இந்த ஆண்டின் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
தேர்த்திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீீதர், செயல் அலுவலர் சீனிவாசன், சஞ்சீவ்சுந்தரம் மற்றும் கோவில் பணியாளர்கள், மண்டகபடிதாரர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Next Story