அனைவரும் ஒத்துழைத்தால் தூய்மை மாவட்டமாக மாற்ற முடியும்; அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைத்தால் தூத்துக்குடி மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக மாற்ற முடியும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைத்தால் தூத்துக்குடி மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக மாற்ற முடியும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தூய்மை பாரதம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-
தமிழகம் தூய்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பது குறித்து அனைத்து உள்ளாட்சிகளுக்கும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் தூய்மை மாவட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எல்லா அமைப்புகளும் பங்கேற்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமையில் மாநகராட்சியுடன் இணைந்து தூய்மையான தூத்துக்குடி, தூய்மை நமது பெருமை என்ற ஒரு அடைமொழியோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழுமையாக தூய்மை படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
ஒத்துழைக்க வேண்டும்
வருகிற 30-ந்தேதி அன்று காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் எல்லா கல்லூரிகளிலும் உள்ள என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. மாணவர்கள் ஈடுபட உள்ளனர். அதுபோல பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் சார்பில் அவர்களது நிறுவனங்களையும், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் அமைப்புகளுமே தங்கள் நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதுபோல பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டையும், சுற்றுப்பகுதியையும், தெருவையும் தூய்மையாக வைக்க வேண்டும்.
மேலும் இந்த தூய்மை பணியின்போது அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அனைத்து துறை அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதியுமே சுத்தப்படுத்தபடும். மேலும் கடற்கரை மற்றும் பிரதான சாலைகளும் சுத்தம் செய்யப்பட உள்ளது. மேலும் அன்றைய தினத்தில் மக்கி போகாத குப்பையை அறவே நீக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் பைகள் வழங்கப்பட உள்ளது. இது வெற்றியடைய மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் ஒத்துழைத்தால் தூத்துக்குடி மாவட்டத்தினை தூய்மை மாவட்டமாக மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் உதவி கலெக்டர்கள், அனைத்து துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story