உப்பள்ளி கலவர சம்பவத்தில் கைதான மதகுரு உள்பட 2 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்


உப்பள்ளி கலவர சம்பவத்தில் கைதான மதகுரு உள்பட 2 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்
x
தினத்தந்தி 23 April 2022 10:13 PM IST (Updated: 23 April 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளி கலவர சம்பவத்தில் கைதான மதகுரு உள்பட 2 பேரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உப்பள்ளி கோர்ட்டு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்

உப்பள்ளி: உப்பள்ளி கலவர சம்பவத்தில் கைதான மதகுரு உள்பட 2 பேரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உப்பள்ளி கோர்ட்டு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

போலீசார் மறுப்பு

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள ஒரு வழிபாட்டு தலம் மீது காவி கொடி பறக்கவிடப்பட்டதாக புகைப்படம் மற்றும் வீடியோ வாட்ஸ்-அப்பில் வைரலானது. மேலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின்பேரில் பழைய உப்பள்ளி போலீசார் வீடியோவை பதிவிட்ட பி.யூ.சி. மாணவரை கைது செய்தனர். 

இதற்கிடையே குறிப்பிட்ட சமுதாயத்தினர் பழைய உப்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு திரண்டு வாலிபரை தங்கள் வசம் ஒப்படைக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். 

134 பேர் கைது

இந்த சந்தர்ப்பத்தில் போராட்டக்காரர்கள் போலீசார், போலீஸ் நிலையம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் போலீஸ் ஜீப் மற்றும் பொது சொத்துகளை சேதப்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர். ஒரு அனுமன் கோவில் மீதும் தாக்குதல் நடத்தினர். 

இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த கலவரத்தில் 12 போலீசார் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 134 பேர் வரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 
மதகுரு

அதன்படி கலவரத்திற்கு மூளையாக செயல்பட்ட மதகுருவான வாசிம் பதான்(வயது 40) மும்பையில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார். அதைதொடர்ந்து முகமது ஆரீப் என்பவர் கைதானார். தலைமறைவாக உள்ள காங்கிரஸ் பிரமுகர் அல்தாப்பை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதற்கிடையே  உப்பள்ளி கலவரத்தில் தொடர்புடையதாக பெங்களூருவில் தவ்பீக் முல்லா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பி.யூ.சி. மாணவருடன் சேர்ந்து வீடியோவை சித்தரித்து வெளியிட்டதாக வீரபத்ர கவுடா என்பவரும் சிக்கினார். கைதானவர்களில் 88 பேர் கலபுரகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் உப்பள்ளி கிளை சிறையில் உள்ளனர். 
 
5 நாட்கள் போலீஸ் காவல்

இந்த நிலையில் உப்பள்ளி கலவரத்திற்கு மூளையாக செயல்பட்ட மதகுருவான வாசிம் பதான், தவ்பீக் முல்லா ஆகிய 2 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2 பேரையும், போலீசார் உப்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரினர். 

இதையடுத்து நீதிபதி 2 பேரையும் 23-ந்தேதி(இன்று) முதல் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உப்பள்ளி கலவரத்தில் மராட்டியத்தை சேர்ந்த முஸ்லிம் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story