கம்பைநல்லூர் அருகே கல்லால் தாக்கி முதியவர் கொலை மகன் வெறிச்செயல்
கம்பைநல்லூர் அருகே கல்லால் தாக்கி முதியவரை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே கல்லால் தாக்கி முதியவரை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
மனைவி பிரிந்து சென்றார்
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள சின்னாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 74). இவருடைய மகன் வெற்றிவேலன் (35). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் மனம் வெறுப்படைந்த அவருடைய மனைவி தனது 2 குழந்தைகளுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வெற்றிவேலன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு சில நேரங்களில் மனநிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
கல்லால் தாக்கி கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெற்றிவேலனுக்கும், அவரது தந்தை லட்சுமணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெற்றிவேலன் தனது தந்தை லட்சுமணனை கீழே தள்ளி விட்டுள்ளார்.
அப்போது கீழே கிடந்த கல்லில் லட்சுமணனின் தலை மோதி அடிபட்டது. மேலும் வெற்றிவேலனும் ஆத்திரத்தில் அங்கு கிடந்த கல்லை எடுத்து தந்தையின் நெற்றியில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் வலிதாங்க முடியாமல் லட்சுமணன் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து லட்சுமணனை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லட்சுமணன் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
கைது
இந்த சம்பவம் குறித்து வெற்றிவேலனின் தாயார் தீத்தியம்மாள் (65) கம்பைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வெற்றிவேலனை நேற்று காலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தந்தையை மகனே கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Related Tags :
Next Story