வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கொரடாச்சேரியில், அண்ணன்-தம்பியை வெட்டிக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவாரூர்:
கொரடாச்சேரியில், அண்ணன்-தம்பியை வெட்டிக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்விேராதம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காமராஜ் சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன்கள் ராஜா என்கிற ஸ்ரீதர் ராஜா(வயது 19), மதன்(22).
இவர்களுக்கும் அதே பகுதியில் வசித்து வந்த ருக்குன் பாட்ஷா(58) என்பவருக்கும் இடையே மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை
இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதி இரவு 10 மணிக்கு ஸ்ரீதர் ராஜா, மதன் ஆகிய இருவரும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ருக்குன் பாட்ஷா மற்றும் அவருடைய மகன்கள் மன்சூர் அலிகான்(32), மர்ஜித் அலிகான்(31) மற்றும் ஹாஜி முகமது(43) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள்
இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று மாவட்ட அமர்வு நீதிபதி சாந்தி தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் ஹாஜி முகமது, ருக்குன் பாட்ஷா, மர்ஜித் அலிகான் ஆகிய மூவருக்கும் இந்திய தண்டனை சட்டம் 148-வது பிரிவின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனையும், 452-வது பிரிவின் கீழ் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், 302-வது பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
மன்சூர் அலிகானுக்கு 148-வது பிரிவின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனையும், 452-வது பிரிவின் கீழ் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், 302-வது பிரிவின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராத தொகையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரையும் போலீசார், பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மணிவண்ணன் ஆஜரானார்.சிறப்பாக புலன் விசாரணை செய்து கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த கொரடாச்சேரி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story