விழா மேடை அமைக்கும் பணியை அமைச்சர்கள் ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ந்தேதி திண்டுக்கல் வருகை தருகிறார். இதற்காக அமைக்கப்பட்டு வரும் விழா மேடையை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல்:
மு.க.ஸ்டாலின் வருகை
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு நிறைவுபெற்ற திட்டங்களை திறந்து வைப்பதற்காகவும், புதிதாக செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ந்தேதி திண்டுக்கல்லுக்கு வருகை தருகிறார்.
மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதற்காக திண்டுக்கல் அங்கிங்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிரமாண்ட விழா மேடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிறப்பான ஏற்பாடு
அப்போது விழா மேடை அமையும் இடம், முக்கிய பிரமுகர்கள், பார்வையாளர்கள் அமரும் இடம் ஆகியவை எப்படி அமைக்கப்பட உள்ளது. விழா மேடை அமைந்துள்ள இடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டுள்ளது? என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
வருகிற 30-ந்தேதி தேனியில் நடக்கும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அதன் பின்னர் மாலை 4 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு வருகை தருகிறார்.
முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் திண்டுக்கல்லுக்கு வருகிறார். இதனால் அவருடைய வருகையை மக்கள் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாங்களும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல்லில் நடக்கும் விழாவில் தேர்வு செய்யப்பட்ட 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்குகிறார். இதுமட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்துக்கான புதிய குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு புதிய நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வேறு எந்த மாவட்டத்தை விடவும் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி உள்ளார். குறிப்பாக 5 கல்லூரிகள் நமது மாவட்டத்தில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்ததை கூறலாம்.
‘நீட்’ தேர்வு
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முதலில் செயல்படுத்தியது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட போது அவர் துணை முதல்-அமைச்சராக இருந்தார்.
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் கல்வி, வேலை வாய்ப்பு உள்பட அனைத்து வளர்ச்சி திட்டங்களும் சமமான முறையில் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடத்துவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். ‘நீட்’ தேர்வை விரைவில் ரத்து செய்வார்.
இதேபோல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் நுழைவு தேர்வுகளையும் தடுக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
ஆய்வின் போது கலெக்டர் விசாகன், திண்டுக்கல் எம்.பி. வேலுசாமி, எம்.எல்.ஏ.க்கள் இ.பெ. செந்தில்குமார், காந்திராஜன், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story