விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
இந்திய அரசாங்கத்தின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் உழவர்களின் பங்களிப்பே நமது முன்னுரிமை என்கிற சிறப்பு முகாம் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 1-5-2022 வரை நடைபெற உள்ளது. இம்முகாம்களில் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான பால் பண்ணை, கால்நடை பராமரித்தல், மீன் வளர்த்தல் ஆகியவற்றிக்கு விண்ணப்பிக்கலாம்.
விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் கடன்களுக்கும் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ.3 லட்சம் வரையிலும், பால் பண்ணை, கால்நடை பராமரித்தல், மீன் வளர்த்தல் ஆகியவற்றிக்கு ரூ.2 லட்சம் வரையிலும் வங்கி கடன் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். கடன்பெறும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டி வசூலிக்கப்படும். இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாக தவணை தவறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை எவ்வித பிணையமும் இன்றி கடன் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
விவசாய கடன் அட்டை கடன் பெற, விவசாயிகள் தங்களின் நில ஆவணங்கள் (பட்டா, சிட்டா, அடங்கல்), ஆதார் அட்டை (கண்டிப்பாக), பான் கார்டு, குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பதாரரின் கடன் மனுக்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு சிபில் இணையத்தில் உள்ள விவசாயிகளின் விவரம் மற்றும் வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நிலம், பயிர் அளவீடு பொறுத்து கடன் வழங்கப்படும்.
எனவே தகுதி வாய்ந்த விவசாயிகள் பூர்த்தி செய்த கடன் விண்ணப்பம் மற்றும் இணை ஆவணங்களுடன் நேரடியாக வங்கி கிளைகளில் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி வணிக தொடர்பாளர்கள் மூலமாகவோ அல்லது, மாவட்ட விவசாயத்துறை அலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலகம், கால்நடை மருத்துவத்துறை அலுவலகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், அரசு பொது கணினி சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தொடர்பு கொண்டு கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் இச்சிறப்பு முகாமில் விவசாய கடன் அட்டை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் மாவட்ட வளர்ச்சி மேலாளர், நபார்டு ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story