ஆட்டுக்கிடை அமைக்கும் விவசாயிகள்


ஆட்டுக்கிடை அமைக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 23 April 2022 10:57 PM IST (Updated: 23 April 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

இயற்கை உரத்துக்காக ஆட்டுக்கிடை அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஒரு ஏக்கருக்கு ஒரு நாள் கிடை அமைக்க ரூ.2 ஆயிரம் செலவாகிறது.

கொள்ளிடம்;
கொள்ளிடம் பகுதியில் இயற்கை உரத்துக்காக வயலில் ஆட்டுக்கிடை அமைக்்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஒரு ஏக்கருக்கு ஒரு நாள் கிடை அமைக்க ரூ.2 ஆயிரம் செலவாகிறது. 
ஆட்டுக்கிடை அமைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சம்பா மற்றும் தாளடி அறுவடை முடிந்து தற்போது உளுந்து அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. கொள்ளிடம் பகுதியில் அறுவடை முடிந்த வயலில் விவசாயிகள் இயற்கை உரத்துக்காக ஆட்டுக்கிடை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மண்ணில் உள்ள அங்கக பொருட்களின் அளவே மண்ணின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதுடன் மண்ணின் அறிவியல் பண்புகளையும் வளர்க்கிறது. 
மண்ணின் வளத்தை மேம்படுத்துவதற்காக வயலில் ஆட்டுக்கிடை அமைக்கும் பழக்கம் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. பகலில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் இரவில் வயலில் கூட்டமாக தங்க வைப்பது ஆட்டுக்கிடை போடும் முறையாகும். ஆடுகளின் கழிவுகளான சாணம், சிறுநீர் ஆகியவை வயல்களில் உரமாக சேகரிக்கப்படுகிறது. ஆடுகளின் சிறுநீரில் அதிக அளவில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன.  நெல், கரும்பு, வாழை, மற்றும் மானாவாரி கரிசல் நிலத்துக்கு ஆட்டுக்கிடை மிகவும் அவசியம். 
மண்ணின் தன்ம மேம்படும்
 ஆட்டு எருவில் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆட்டுக் கிடை போடுவதால் மண்ணில் நீர் பிடிப்புத்திறன், மண்ணின்தன்மை, காற்றோட்டம், மண்ணின் அடர்வு  தன்மை மேம்படுகிறது. 
 மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்படுவதுடன் அதன் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. ஆட்டுக்கிடை போடுவதன் மூலம் வயலுக்கு உரங்கள் எடுத்து சென்று போட தேவையில்லை. குறைந்த செலவில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. மேலும் பயிர் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் களைகளை கட்டுப்படுத்துகின்றன. சத்துக்கள் அனைத்தும் உடனடியாக பயிருக்கு கிடைக்கின்றன. எனவே பாரம்பரியமிக்க இந்த ஆட்டு கிடையை பயன்படுத்தி மண்ணின் தன்மையை மேம்படுத்த வேண்டும் என்று  கிடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Next Story