கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் படிக்கட்டு பயணங்களை தவிர்க்க கூடுதல் பஸ் வசதி கலெக்டர் தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் படிக்கட்டு பயணங்களை தவிர்க்க கூடுதல் பஸ் வசதி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 April 2022 11:08 PM IST (Updated: 23 April 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் படிக்கட்டு பயணங்களை தவிர்க்க கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.


கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணம் செய்வதை தவிர்கும் வகையில் கூடுதல் பஸ்கள் இயக்குவது மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது  தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் முன்னிலை வகித்தார். 

கூடுதல் பஸ் வசதி

கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவா்கள் பஸ்சில் படிக்கட்டு பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில், காலை மற்றும் மாலை நேரங்களில் தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. 

அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் உளுந்தூர்பேட்டை -மங்கலம்பேட்டை,  பெரியசெவலை கூட்டுச்சாலை - உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் -குன்னியூர், ஆசனூர் -கள்ளக்குறிச்சி என்று பல்வேறு வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மேலும் சில வழித்தடங்களில்  மாணவர்கள் பஸ்சில் படிக்கட்டு பயணம் மேற்கொள்கிறார்கள். அதேபோல் சமீப காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக மாணவர்களிடையே கருத்து மோதல்கள் உருவாகி வருகிறது. இவைகளை எல்லாம் தவிர்ப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு மற்றும் தேவையான வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கிட வேண்டும்.

விழிப்புணர்வு

அதோடு, ஒழுங்கீன முறையில் செயல்படும் மாணவர்களை போலீசார் கண்டறிந்து  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் வாயிலாக நல்லொழுக்கத்துடன் நடந்துகொள்ள அறிவுரை வழங்க வேண்டும். பஸ்சில் ஆபத்தான பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிரைவர் மற்றும் கண்டக்டர் தகுந்த அறிவுரைகளை வழங்குவதுடன், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திட வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிண்டு ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா,

 திருக்கோவிலூர் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (இயக்கம்) மணி, அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story