மராட்டியத்தில் ஜீப் மீது லாரி பயங்கர மோதல்- 5 பெண்கள் உள்பட 7 பேர் பலி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 23 April 2022 11:25 PM IST (Updated: 23 April 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 5 பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

பீட், 
மராட்டியத்தில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 5 பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 
ஜீப் மீது மோதி விபத்து
மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் சாய் மற்றும் ஆர்வி கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் பீட் மாவட்டம் அம்போஜோகை தாலுகா ராடி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  ஜீப்பில் புறப்பட்டு சென்றனர். காலை 10.30 மணி அளவில் அம்போஜோகை தாலுகா சாய்காவ் கிராமம் அருகே சென்ற போது, எதிரே லாரி ஒன்று வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரி ஜீப் மீது பயங்கரமாக மோதியது. 
இந்த விபத்தில் ஜீப்பில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
6 பேர் பலி
இதில் 5 பெண்கள் மற்றும் சிறுவன், டிரைவர் என 7 பேர் பலியாகினர். இதையடுத்து பலியான 7 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயம் அடைந்த 10 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 
விபத்தில் பலியானவர்கள் பெயர் நிர்மலா (வயது 38), சுவாதி (35), சகுந்தலா (38), சோஜர்பாய் கதம் (37), சித்ரா ஷிண்டே (35), டிரைவர் காந்து ரோகிலே (35) மற்றும் 10 வயது சிறுவன் என தெரியவந்தது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த பயங்கர விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் சாய் மற்றும் ஆர்வி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story