இந்த தாகம் என்று தான் தீருமோ?


இந்த தாகம் என்று தான் தீருமோ?
x
தினத்தந்தி 23 April 2022 11:36 PM IST (Updated: 23 April 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் தண்ணீரை தேடி தள்ளு வண்டிகளில் குடங்களுடன் பெண்கள் அலைகின்றனர்.

ராமேசுவரம்,

தகிக்கும் வெயில். காலில் செருப்புக்கூட அணியவில்லை. தன் குடும்பத்தாரின் தாகத்தை தணிக்க, வியர்க்க, விறுவிறுக்க பெண்கள் சிலர் காலியான பிளாஸ்டிக் குடங்களை தள்ளுவண்டியில் வரிசையாக அடுக்கி வைத்து கொண்டு கொதிக்கும் தார் ரோட்டில் வீறு நடை போட்டனர். 3 பெண்களில் ஒருவர் மட்டும் செருப்பு அணிந்திருந்தார். மற்ற இருவர் செருப்புக்கூட அணியவில்லை. எப்படியும் தன் குடும்பத்தாரின் தாகத்தை தணிக்கவும், சமையல் உள்ளிட்ட ேதவைக்காகவும் அந்த பெண்கள் வேகமாக தள்ளுவண்டிகளில் சென்று கொண்டிருந்தனர். பின்னர் சற்று தொலைவில் உள்ள கிணற்றுக்கு சென்று வாளியில் தண்ணீரை இறைத்து, குடங்களை நிரப்பினர். அதன்பின்னர் அந்த குடங்களை மீண்டும் தாங்கள் கொண்டு வந்த தள்ளுவண்டிகளில் வைத்து கொண்டு கால்கடுக்க தங்கள் வீட்டை நோக்கி புறப்பட்டனர். குடங்களில் நிரப்பிய நீரை வற்றும் நோக்கத்தில் ஆதவன் கொதித்தெழுந்தான். இருப்பினும் தங்கள் குடும்பத்தாரின் தாகம் தீர்க்க இன்று தண்ணீர் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அந்த பெண்கள் நெற்றி வியர்வையிலும் தங்கள் வீட்டை நோக்கி உற்சாக நடை போட்டனர். இந்த காட்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தேரிருவேலி சாலையில் நேற்று அரங்கேறியது. இந்த ஒரு ஊர் மட்டும் அல்ல. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தினசரி இந்த நிகழ்வு அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.
ஒருபுறம் தாகம் தணிக்க உதவாத கடல்நீர் பரந்து காணப்படுகிறது. மற்றொரு புறம் தண்ணீரை பார்க்காத குளம், குட்டைகள் பரவலாக காணப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு சில கண்மாய்கள், குளங்கள் தண்ணீர் நிரம்பி காணப்பட்டன. அவை இப்போது கோடை காலத்தால் வற்ற தொடங்கி உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் பல வளர்ச்சி பெற்று வந்த போதிலும் குடிதண்ணீர் பிரச்சினை மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சாயல்குடி, வாலிநோக்கம், கடுகு சந்தை, சத்திரம், மலட்டாறு, கடலாடி சிக்கல் மற்றும் முதுகுளத்தூர் தாலுகா தேரிருவேலி, மல்லல், கருங்கல், திருஉத்திரகோசமங்கை, ஆணைகுடி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்களில் மக்கள் இன்னும் குடிதண்ணீருக்காக தள்ளுவண்டிகளில் குடங்களை வைத்து தினமும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அலைந்து திரியும் நிைல தொடர் கதையாக தான் உள்ளது.
காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இருந்து வந்தாலும் அந்த காவிரி நீரானது இன்னும் மாவட்டத்தில் பல ஊர்களில் உள்ள கிராமங்களுக்கும் சரியாக போய் சேரவில்லை.
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குடிதண்ணீருக்காக பல ஆண்டுகளாக தள்ளுவண்டிகளில் குடங்களை வைத்து அலையும் நிலையை மாற்றி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பை கொண்டுவந்து மக்கள் படும் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ராமநாதபுரம் மாவட்ட மக்களின் கோரிக்கை மற்றும் விருப்பமாகும். 
இது இப்படி இருக்க.. இப்பகுதி மக்கள் மழை பெய்யுமா? தண்ணீர் தாகம் தீருமா? என்று எதிர்பார்க்க.. நேற்று தனுஷ்கோடியில் கடலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக பெய்தது. இப்படி வருண பகவான் கூட கருணை காட்ட மறுக்கிறாரே என்று ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கவலைப்படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தண்ணீர் தாகம் என்று தான் தீருமோ?


Next Story