புதுக்கோட்டையில் பனை ஓலை விசிறி விற்பனை மும்முரம்


புதுக்கோட்டையில் பனை ஓலை விசிறி விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 23 April 2022 11:40 PM IST (Updated: 23 April 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

கோடைகாலம் மற்றும் அடிக்கடி மின்வெட்டு காரணமாக புதுக்கோட்டையில் பனை ஓலை விசிறி விற்பனை மும்முரமடைந்துள்ளது.

புதுக்கோட்டை, 
கடும் வெயில்
புதுக்கோட்டையில் கோடை கால வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் வருகிற 4-ந் தேதி தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கிறது. அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் கடுமையான வெயிலை பொதுமக்கள் சமாளிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இரவிலும் வெப்பம் தாக்கம் உள்ளது.
இதற்கிடையில் புதுக்கோட்டையில் கடந்த ஓரிரு நாட்களாக இரவு நேரத்தில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் இரவில் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதேபோல் மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் மின் வெட்டு காணப்பட்டது.
பனை ஓலை விசிறி
இந்த நிலையில் கோடை காலத்தில் வீடுகளில் பலர் விசிறிகளை வாங்கி வைத்திருப்பது வழக்கம். மின் விசிறி ஓடினாலும் இயற்கையிலான பனை ஓலையில் பின்னப்பட்ட விசிறியை பலர் பயன்படுத்துவது உண்டு. குறிப்பாக முதியவர்கள் பலர் தங்களது இருக்கையின் அருகே வைத்திருப்பதை காணமுடியும். வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிக்க விசிறியால் வீசிக்கொள்வார்கள்.
இதேபோல் மின்தடை ஏற்படுகிற நேரத்திலும் இந்த விசிறியை பயன்படுத்துவது உண்டு. தற்போது கோடை காலம் மற்றும் மின்வெட்டு பிரச்சினை நிலவுகிற நிலையில் கடைகளில் பனை ஓலையாலான விசிறி விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன. இதனை பொதுமக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர். இதனால் பனை ஓலை விசிறி விற்பனை மும்முரமடைந்துள்ளது. ஒரு பனை ஓலை விசிறி ரூ.10 முதல் ரூ.15 வரைக்கும் விற்பனையாகிறது.
சந்தைகள்
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரையூர் பகுதியில் பனை ஓலையில் விசிறி தயாரிக்கும் தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து பல இடங்களுக்கு விசிறிகள் விற்பனைக்கு செல்கிறது. சந்தைகளிலும் பனை ஓலை விசிறி விற்பனை தற்போது மும்முரமடைந்துள்ளது. இதேபோல் பிளாஸ்டிக் விசிறிகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது’’ என்றார்.

Next Story