தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு மத்திய அரசே காரணம்- கே.எஸ். அழகிரி
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் வெட்டுக்கு மத்திய அரசே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கும்பகோணம்:-
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் வெட்டுக்கு மத்திய அரசே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
அடிக்கல் நாட்டு விழா
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெரு பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சரவணன் வரவேற்றார்.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ராஜ்குமார், ரூபி.மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தோல்வி அடைந்துள்ளது
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை தவிர்க்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. மின்வெட்டு குறித்து மாநில அரசு தெளிவாகக் கூறியிருக்கிறது. நிலக்கரியை வழங்க வேண்டியது மத்திய தொகுப்பு. அங்கிருந்து நிலக்கரி வந்தால்தான் அனல் மின் நிலையம் வேலை செய்யும். மாநில அரசு நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது. இத்துறையில் மோடி அரசு தோல்வியடைந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், எட்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த நிலைமை நீடிக்கிறது. நிலக்கரி உற்பத்திக்கு ஏற்பாடு செய்யுமாறும், நிலக்கரி கையிருப்பை அதிகப்படுத்துமாறும் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ஆனால் மத்திய அரசு அதை கேட்கவே இல்லை.
மின்வெட்டுக்கு மத்திய அரசே காரணம்
எனவே இப்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு மிக முக்கிய காரணம் மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததுதான். மின் வெட்டைப் போக்க தமிழக முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதால் விரைவில் நிலைமை சரியாகும்.
மாநில உரிமைகளை மதிக்காத காரணத்தால், பொதுமக்கள் திரண்டு கவர்னருக்கு எதிரான போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இவ்வாறு அழகிரி கூறினார்.
Related Tags :
Next Story