இடி-மின்னலுடன் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை
குமரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
சாலைகளில் வெள்ளம்
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெயில் கடுமையாக இருந்தது. நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இடி-மின்னலுடன் சுமார் 5 மணி நேரம் வரை விடிய விடிய நீடித்தது.
இதனால் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. குறிப்பாக நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு, கோட்டார் கேப்ரோடு, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி ரோடு, செம்மாங்குடி ரோடு, வடசேரி அசம்பு ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள். இந்த மழை மாவட்டம் முழுவதும் பெய்ததால் ஆறுகள், கால்வாய்களிலும் மழை தண்ணீர் அதிகமாக சென்றது.
வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
நித்திரவிளை பகுதியில் பெய்த கனமழையால் குமரி மாவட்டத்தில் இருந்து கடற்கரை மார்க்கமாக கேரளா செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி சென்றன.
இந்த சாலையைெயாட்டி உள்ள பாணந்தோப்பு, ஏலாக்கரை போன்ற இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்து நின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். ெதாடர்ந்து அவர் மழைநீர் ஓடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரியும், பாணந்தோப்பு குளத்தை ஆழப்படுத்தியும் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் அவதி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் இந்த பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் உறவினர்கள் வீடுகளிலும், பேரிடர் மீட்பு மையங்களிலும் தஞ்சமடைந்து இருந்தனர். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். இதனிடையே மீண்டும் மழை பெய்து குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது
காஞ்சாம்புறம் அருகே மாங்குளி பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு சாலைகளில் மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமடைந்தனர்.
குழித்துறை
மார்த்தாண்டம், குழித்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை மீது சுமார் 1½ அடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் தடுப்பணை மீது நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திற்பரப்பு அருவி
மலையோர பகுதியில் பெய்த மழையால் கோதையாற்றில் அதிக வெள்ளம் வருகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர். அத்துடன், மேல் பகுதியில் அணைக்கட்டில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இதுபோல், திருவட்டார் அருகே உள்ள அருவிக்கரையில் பறளியாற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து பாய்கிறது. இந்த பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பாறைகளின் இடைேய சல சலவென பாய்ந்தோடும் தண்ணீரும், சுற்றிலும் பச்சைப்பசேல் என காட்சிதரும் இயற்கையும் பார்த்து மகிழ்ந்தனர்.
மாம்பழத்துறையாறில் 79 மி.மீ. பதிவு
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை- 27.2, பெருஞ்சாணி- 9.2, சிற்றார் 1- 4, சிற்றார் 2- 3, புத்தன் அணை- 10.4, மாம்பழத்துறையாறு - 79, முக்கடல் அணை- 12.2, பூதப்பாண்டி- 35.2, களியல்- 62.8, கன்னிமார்- 28.2, கொட்டாரம்- 15.4, குழித்துறை- 55.6, மயிலாடி- 42.2, நாகர்கோவில்- 72.4, சுருளக்கோடு- 28.4, தக்கலை- 71, இரணியல்- 12.4, பாலமோர்- 17.4, ஆரல்வாய்மொழி- 20, கோழிப்போர்விளை- 67, அடையாமடை- 32, குருந்தங்கோடு- 21.2, முள்ளங்கினாவிளை- 62.4, ஆனைக்கிடங்கு- 77.2 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story