மாணவர்கள் கல்வீசி தாக்கியதில் பஸ் கண்ணாடி சேதம்
கீரனூரில் படிக்கட்டில் தொங்கி கொண்டிருந்த மாணவர்களை கீழே இறக்கியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடி சேதம் அடைந்தது.
கீரனூர்,
படிக்கட்டில் பயணம்
கீரனூரிலிருந்து திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் மாலை நேரங்களில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கீரனூரிலிருந்து திருச்சி நோக்கி மாலை 6 மணியளவில் டவுன் பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதில் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
கல்வீசி தாக்குதல்
இதனைக்கண்ட கண்டக்டர் பாலுச்சாமி (வயது 53) நடுவழியில் பஸ்சை நிறுத்தி பாதுகாப்பு கருதி படியில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை கீழே இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர் சற்று நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பஸ்சை விரட்டி சென்றனர். ஒத்தக்கடை அருகே பஸ்சின் பின்புறம் கல்வீசி தாக்கினர். இதில், பஸ் கண்ணாடியை உடைந்து நொறுங்கியது. பின்னர் அந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
பஸ்சின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் மீது உடைந்த கண்ணாடி சிதறல்களால் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் பஸ்சை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கி விட்டு கீரனூர் போலீஸ் நிலையத்துக்கு பஸ்சை கொண்டு வந்து நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து கண்டக்டர் பாலுச்சாமி கீரனூர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடி உடைத்த மாணவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story