திருமயம் கோட்டை மலையில் அதிசய பாறை


திருமயம் கோட்டை மலையில் அதிசய பாறை
x
தினத்தந்தி 24 April 2022 12:08 AM IST (Updated: 24 April 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

திருமயம் கோட்டை மலையில் அதிசய பாறையை கண்டு பார்வையாளர்கள் வியந்து வருகின்றனர்.

திருமயம், 
திருமயம் கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ள மலையை சுற்றி கோட்டை காணப்படுகிறது. இந்த கோட்டையானது ராமநாதபுரத்தை சேர்ந்த சேதுபதி விஜயரகுநாத தேவர் எனும் கிழவன் சேதுபதி என்பவரால் கடந்த 1673-1708-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த கோட்டையானது பிற்காலத்தில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. முக்கிய நுழைவுவாயில் கிழக்குபகுதியில் அமைந்துள்ளது. விநாயகர், அனுமன் மற்றும் பைரவர் ஆகிய சுவாமிகள் காவல் தெய்வங்களாக வைக்கப்பட்டுள்ளன. 
கோட்டையின் வெளிப்புற சுவற்றையொட்டி அகழி இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. மலையின் உச்சியில் கோட்டை சுவற்றில் ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சிறுகருங்கற்கள், செங்கற்களை கொண்டு இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்த மலையை குடைந்து சிவன், பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
அதிசய பாறை
திருமயம் கோட்டையை காண தற்போது பார்வையாளர்கள் அதிகம் வரத்தொடங்கி உள்ளனர். அதிலும் காதல் ஜோடிகள் அதிகளவில் வருகிறார்கள். இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்த கோட்டை உள்ளது. கோட்டையை சுற்றிப்பார்க்க மலையின் உச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இந்த படிக்கட்டுகளை கடந்து செல்வதற்கு முன்பு மலையில் அதிசய பாறை ஒன்று இருப்பதை காணமுடியும். இந்த பாறை எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் காணப்படும். புயல், மழை என இயற்கை சீற்றம் வந்தாலும் அசையாமல், உருண்டு ஓடாமல் அப்படியே நிற்பது தான் பெரும் அதிசயமாகும்.
இந்த பாறையை கண்டு பார்வையாளர்கள் வியந்து வருகின்றனர். ஏற்கனவே பல முறை சென்றவர்களுக்கு இந்த பாறை வெறும் கல்லாகத்தான் தெரியும். ஆனால் அதன் அமைப்பை உற்று நோக்கினால் அதிசயம் தெரியும். தற்போது இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிடுகின்றனர்.

Next Story