தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 April 2022 12:12 AM IST (Updated: 24 April 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் 
கரூர் மாநகராட்சி  தாந்தோணிமலை பகுதியில் உள்ள  காலியிடத்தில் புதர் மண்டி விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக மாறியுள்ளது.  இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடனேயே சென்ற வருகின்றனர். மேலும் அருகில் வசிக்கும் வீடுகளில் விஷ ஜந்துக்கள் புகுந்து குடியிருப்பு வாசிகளை சீண்டும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தாந்தோணிமலை, கரூர். 

ஆபத்தான சார்பதிவாளர் அலுவலகம் 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இயங்கி வந்த சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் வகையில், 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்திற்கு சார்பதிவாளர் அலுவலகம்  மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. பதிவு அலுவலகம் அருகில் நிழல் தரும் மரம் கூட இல்லாததால் பத்திரப்பதிவுக்கு வரும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  எனவே அறந்தாங்கி மையப்பகுதியில் இருக்கக் கூடிய ஆபத்தான கட்டிடத்தை அகற்றிவிட்டு விரைவில் புதிய கட்டிடம் கட்டி அதில் பத்திரப்பதிவு அலுவலகத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராஜேந்திரன், அறந்தாங்கி, புதுக்கோட்டை.

டாஸ்மாக் கடை அகற்றப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, கோத்திராப்பட்டி கிராமம் மலைக்குடிப்பட்டியில்  இருந்து திருநல்லூர் செல்லும் சாலையில் கட்டக்குடி கிராம பெரியகுளம் கண்மாய் நீர்வரத்து பாதையை அடைத்து அரசு, கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடையை திறந்தது.  இந்த சாலை வழியாக கட்டக்குடி, திருநல்லூர், ஈஸ்வரன் கோவில் ஆகிய கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும்  மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த டாஸ்மாக் கடையை அச்சத்துடனேயே கடந்து சென்று வருகின்றனர். மேலும்  மது வாங்கி அருந்துபவர்கள் பாட்டில்களை உடைத்து கண்மாயில் வீசி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நீர் வளமும், விவசாய நில பாசன வசதியும் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 பொதுமக்கள், திருநல்லூர், புதுக்கோட்டை.

கொசுக்கள் தொல்லை 
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, வளையப்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளதால் இப்பகுதி மக்கள் கொசுக்கடியில் தவித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மாலை நேரத்தில் இப்பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள்,  வளையப்பட்டி, புதுக்கோட்டை.

தகன மேடை  அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், சோபனபுரம் ஊராட்சியை சேர்ந்த ஒடுவம்பட்டியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில்  மயான பாதை வசதி, மயான மேடையின்றி, மழைக்காலங்களில் சடலங்களை தகனம் செய்வதில் இப்பகுதி மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். ஆகவே இப்பகுதியில் பாதை வசதியுடன் கூடிய மயான தகன மேடை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஒடுவம்பட்டி, திருச்சி. 

கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு  
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் சாலைகளின் நடுவே கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கால்நடைகள் மீது வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், துவரங்குறிச்சி, திருச்சி. 

பயனற்ற நூலகம் 
திருச்சி மாவட்டம், துறையூர் நகரம், 21-வது வார்டு பாலக்காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் நகராட்சியால் நூலகம் கட்டப்பட்டது. ஆனால் இந்த நூலகம் இதுநாள்வரை செயல்படாமல் உள்ளது. தற்போது இந்த நூலகம் தெருநாய்களின் வசிப்பிடமாக உள்ளது. மேலும் இதன் அருகே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த நூலகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலச்சந்திரன், துறையூர், திருச்சி. 

மேடு, பள்ளமான சாலை
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, என்.பூலாம்பட்டியில் நீண்ட ஆண்டு கோரிக்கைகளுக்கு பிறகு என்.பூலாம்பட்டியில் இருந்து குஜிலாம்பாறை மெயின் ரோடு வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்துக்கு தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அது மிகவும் தரமில்லாமலும், சமன் இல்லாமலும், மேடு, பள்ளங்களாகவும்  இருப்பதால் வாகன ஓட்டிகளும், ஊர் மக்களும் மிகுந்த சிரமத்துடனேயே பயணிக்கின்றனர். அதுமட்டுமின்றி இருசக்கர  வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், என்.பூலாம்பட்டி, திருச்சி. 


Next Story