2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கைகோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா
குளித்தலையில் 2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கைகோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
குளித்தலை,
தர்ணா போராட்டம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நச்சலூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் தனது மகன்களான கதிர்செல்வன், மித்ரன் என்பவர்களுடன் குளித்தலை காந்திசிலை அருகே அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தனக்கும் தோகைமலை சின்னையம்பாளையம் அருகே உள்ள வெந்தபட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2018-ம்ஆண்டு மார்ச் 19 -ந் தேதி திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். எனது கணவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வண்டி, பணம், நகை கேட்டு என்னை திட்டி அடித்து துன்புறுத்தி வந்தார். இதற்கு எனது மாமனாரான மருதை, மாமியார் நவமணி, ஆகியோர் எனது கணவருக்கு சாதகமாகப் பேசி எனது தந்தை வீட்டில் இருந்து வாகனம் மற்றும் நகை பணம் வாங்கி வந்தால்தான் என் மகனுடன் வாழ விடுவேன் இல்லை எனில் எனது மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று கூறி விவாகரத்து தர வேண்டுமென அடித்தும் எனது கணவரை விட்டு விலகு என்று கொடுமைப்படுத்தினர்.
சட்டரீதியாக நடவடிக்கை
இதுதொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2021-ம்ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மனு அளித்திருந்தேன். இந்தநிலையில் எனது கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டார். அவரது இரண்டாவது மனைவியான மகாலட்சுமி என்பவருக்கு குளித்தலை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்துள்ளது. எனவே என்னையும் எனது குழந்தைகளையும் அனாதையாக விட்டுவிட்டு 2-வது திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மணிகண்டனை கைது செய்து அந்த திருமணத்திற்கு துணை நின்ற மாமனார், மாமியார் கணவரின் தம்பி ஆகியோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் எனது கணவர் வீட்டில் குழந்தைகளுடன் வாழ்வதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இரண்டு முறை புகார் மனு அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து பிரியதர்ஷினியின் புகாரின்பேரில் மணிகண்டன், அவரின் தந்தை மருதை, தாயார் நவமணி, மணிகண்டனின் சகோதரர் ராஜா, மணிகண்டன் 2-வது திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story