மகள்களை அறையில் பூட்டி வைத்து பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே குடும்பத் தகராறில் வீட்டின் கதவைப்பூட்டி விட்டு 3 குழந்தைகளின் கண் முன்னே தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை அருகே குடும்பத் தகராறில் வீட்டின் கதவைப்பூட்டி விட்டு 3 குழந்தைகளின் கண் முன்னே தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேஸ்திரி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி புளியங்கொட்டை, தென்னந்தோப்பு வட்டம் பகுதியை சேர்ந்த குப்பன் மகன் பெருமாள் (வயது 30). மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் அடியத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் நதியாவுக்கும் (28) கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நிசானி (6), ரேணுகா தேவி (5), யாஷ்வினி (5 மாதம்) என 3 மகள்கள் உள்ளனர்.
பெருமாளின் அண்ணன் அன்பழகனின் மனைவி அம்பிகாவிற்கு திருமணமாகி இதுவரை குழந்தைகள் இல்லை.
பெருமாளின் மனைவி நதியாவுடன் 5 மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் அம்பிகா கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
வீட்டிற்குள் பூட்டினார்
நேற்று அம்பிகா தனது வீட்டிற்கு திரும்பியபோது அவருக்கும் நதியாவிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன விரக்தி அடைந்த நதியா 3 குழந்தைகளையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று கதவை மூடி உள்பக்கம் பூட்டிக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்பு தகராறு ஏற்படும்போது நதியா அறைக்குள் சென்று இதுபோன்று கதவை பூட்டிக்கொள்வாராம். இதனால் நேற்று நடந்த சம்பவத்தின்போது வீட்டை பூட்டிக்கொண்ட நிலையில் யாரும் அவரை சென்று பார்க்கவில்லை.
இந்த நிலையில் சிறிது நேரத்தில் வீட்டினுள் இருந்த குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டது. அப்போது நதியாவின் குடும்பத்தினர் மற்றும் வீட்டின் அருகே வேலை செய்துகொண்டிருந்த கணவன் பெருமாள் ஆகியோர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது நதியா, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.
பிரேத பரிசோதனை
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நதியாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்தபோது நதியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று நதியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக நதியாவின் கணவர் பெருமாள், இவரது அண்ணன் அன்பழகன், இவரது மனைவி அம்பிகா ஆகிய 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத் தகராறில் 3 குழந்தைகளின் கண் முன்னே தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story