ராமநாதன் ரவுண்டானா-மேரீஸ்கார்னர் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றம்
தஞ்சையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ராமநாதன் ரவுண்டானாவில் இருந்து மேரீஸ்கார்னர் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.
தஞ்சாவூர்:-
தஞ்சையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ராமநாதன் ரவுண்டானாவில் இருந்து மேரீஸ்கார்னர் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் சில வழிகளில் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தஞ்சை மேரீஸ்கார்னரில் இருந்து ராமநாதன் ரவுண்டானா வரையிலான சாலையும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையாகும். இந்த சாலையில் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள் மற்றும் பல்வேறு கடைகள் உள்ளன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஒரு வழிப்பாதையாக மாற்றம்
இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால் எதிர், எதிரே வாகனங்கள் வரும்போது வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ராமநாதன் ரவுண்டானாவில் இருந்து மேரீஸ்கார்னர் செல்லும் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து வாகனங்கள் வந்து செல்வதற்காக வ.உ.சி.நகரில் உள்ள பிரதான சாலையை சீர் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதனை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாளை முதல் அமல்
பின்னர் மேயர்.சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சை ராமநாதன் ரவுண்டானாவில் இருந்து மேரீஸ்கார்னர் செல்லும் சாலை நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. தஞ்சை நகரம் மற்றும் பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணியில் இருந்து வரும் பஸ்கள் வழக்கம்போல் மேரீஸ்கார்னர் வழியாக சென்று ராமநாதன் ரவுண்டானா வழியாக செல்லும்.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் ராமநாதன் ரவுண்டானா வந்து வ.உ.சி.நகர் பிரதான சாலை வழியாக சென்று கல்பனா ஆஸ்பத்திரி வழியாக மேரீஸ்கார்னர் சாலைக்கு வந்து செல்லும். மேலும் அந்த பகுதியில் 3 பள்ளிகள் உள்ளதால் ஒவ்வொரு பள்ளியும் திறக்கும் நேரத்தில் சிறிது கால இடைவெளி விடுமாறும், அதே போன்று மாலையிலும் பள்ளி விடும் நேரத்திலும் சிறிது இடைவெளி விடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு அவர்களும் மாற்றி அமைத்துள்ளனர் என்றார்.
Related Tags :
Next Story