மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது பொதுமக்கள் சாலை மறியல்
ஜவ்வாதுமலை காவலூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது. இதனால் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது. இதனால் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மலைசாலை
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே ஆர்.எம்.எஸ். புதூர் பகுதியில் இருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய, வனத்துறைக்கு சொந்தமான 9 அடி அகல மலைசாலை, பராமரிப்பு பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியிலிருந்து ஜமுனாமரத்தூர், போளூர், திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த மலைப்பாதை பயன்படுகிறது.
இவ்வழியாக இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள், சரக்கு வாகனங்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. மேலும் ஜமுனாமரத்தூர் பகுதிகளில் வசித்து வரும், மலைவாழ் மக்கள் மருத்துவமனை உள்ளிட்ட தங்களது அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு இந்த மலைப்பாதைையயே பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த இடத்தில் ஏற்கனவே அப்பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 6 பேர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர். மேலும் 2 வாகனங்கள் நேருக்கு நேர் சந்திக்கும் போது சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, சாலையை அகலப்படுத்தி தரவேண்டுமென்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு பழைய சாலை மீது புதிய தார்சாலை போடப்பட்டுள்ளது.
லாரி கவிழ்ந்தது
இதனால், சாலையின் உயரம் 2 அடிக்கும் மேல் உயர்ந்து விட்டதால், எதிர் திசையில் வரும் வாகனங்கள் சந்திக்கும்போது ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 2 அடிக்கு கீழே உள்ள பள்ளத்தில் வாகனங்களை இறக்குவதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு ஆலங்காயத்தில் இருந்து காவலூர் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. நொசகுட்டை என்ற பகுதியில், எதிரே வந்த பஸ்சுக்கு வழி விடும் போது திடீரென 2 அடி பள்ளத்தில் இறங்கியதால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாலை மறியல்
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு வந்து பலமுறை சாலையை சீரமைக்க கோரி கேட்டும் சீரமைத்து தராததால், மீண்டும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மலைக்கு செல்லும் வாகனங்களும் மலையிலிருந்து கீழே இறங்கும் வாகனங்களும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரிசை கட்டி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன், தாசில்தார் சம்பத், ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலையை சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அதுவரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், தேவராஜி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் மற்றும் வனத்துறையினர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழக அரசு மற்றும் அமைச்சரிடம் பேசி விரைவில் சாலை விரிவாக்க பணி செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து 9 மணி நேரம் போராட்டம் நடத்திய பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் மலை சாலையில் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story