திருப்பத்தூர் அருகே ஆற்றுக்குள் கார் பாய்ந்தது; வாலிபர் பரிதாப சாவு
திருப்பத்தூர் அருகே ஆற்றுக்குள் கார் பாய்ந்தது. இதில் வாலிபர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே ஆற்றுக்குள் கார் பாய்ந்தது. இதில் வாலிபர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆற்றுக்குள் பாய்ந்த கார்
தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியைச் சேர்ந்த ராமன் (வயது 33), விக்னேஷ் (26), மாரியப்பன் (22), ராம்குமார் (25), அருள் (31), ஆகியோர் தஞ்சாவூர் கோவிலுக்குச் செல்வதற்காக நள்ளிரவில் காரில் வந்து உள்ளனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் திருப்பத்தூர் அருகே நெடுமறம் விருசுளியாற்றின் பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி தலைக்குப்புற ஆற்றில் பாய்ந்தது. ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார் நொறுங்கியது.
இந்த விபத்தில் ராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.இது குறித்து தகவலறிந்த நெடுமறம் கிராம மக்கள் மற்றும் திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
4 பேர் படுகாயம்
காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் இப்பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இந்த பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story