தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை
அருப்புக்கோட்டை நகர் முழுவதும் தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகர் முழுவதும் தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
தெப்பக்குளம்
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம் அமைந்துள்ளது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் தெப்ப குளத்தை மேம்படுத்தும் பணியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அருப்புக்கோட்டையில் உள்ள தெப்பக்குளங்களை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தோம். அந்த வாக்குறுதிகள் தற்போது நிறைவேற்றப்படுகின்றன.
சொக்கலிங்கபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவில் தெப்பகுளத்தை சுற்றி வேலி அமைத்து மின்விளக்குகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தாமிரபரணி குடிநீர்
இன்னும் ஓரிரு மாதங்களில் அருப்புக்கோட்டை நகர் முழுவதும் தாமிரபரணி குடிநீர் மட்டும் வழங்க உள்ளோம். அருப்புக்கோட்டை, இருக்கன்குடி உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய்களை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக பொதுப்பணித்துறை அமைச்சரை அழைத்து வந்து நேரில் காண்பிக்க உள்ளோம். மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் ஆகாயத் தாமரைகளை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் எதிர்காலத்தில் நிச்சயமாக செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகரசபை தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், நகர செயலாளர் மணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாகரன், உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், கோவில் நிர்வாகி தேவி, நகர்மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story