வெள்ளரி விளைச்சல் அமோகம்


வெள்ளரி விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 24 April 2022 1:29 AM IST (Updated: 24 April 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளரி விளைச்சல் அமோகமாக உள்ளது.

அரியலூர்:

வெள்ளரி விளைச்சல்
அரியலூர் நகரில் பல ஏக்கர் பரப்பளவில் வெள்ளரி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு தினமும் ஏரிகளில் உள்ள தண்ணீரை வயலில் பாய்ச்சி, களையெடுத்து இயற்கையாக விவசாயம் செய்யப்படுகிறது. கோடை காலம் காரணமாக தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அக்னி நட்சத்திரத்தின்போது வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளது. வெயிலின் தாக்கத்தை தணித்துக்கொள்ள பொதுமக்கள் வெள்ளரி பிஞ்சுகளையும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்நிலையில் தற்போது அரியலூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளரி அமோக விளைச்சல் கண்டுள்ளது. மேலும் அரியலூரில் விளையும் வெள்ளரிப் பிஞ்சுகள் நல்ல சுவை உள்ளதாக இருக்கின்றன. இதனால் தினசரி நூற்றுக்கணக்கான கூடைகளில் பறிக்கப்பட்ட வெள்ளரி பிஞ்சுகளை பெண்கள் மொத்தமாக வாங்கிச்சென்று பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
வெள்ளரிப்பிஞ்சு விற்பனை
மேலும் அரியலூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், விருதாச்சலம், பெரம்பலூர், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு வெள்ளரி பிஞ்சுகளை விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஒவ்வொரு செடியிலும் சில பிஞ்சுகளை வளரவிடப்படும். அவை பெரிய அளவில் வந்தவுடன் பழமாகி வெடித்துவிடும்.
வெள்ளரிப் பழத்தில் நாட்டுச் சர்க்கரை தூவி வெயிலில் காயவைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள சூடு குறையும், ேமலும் வெள்ளரிப் பிஞ்சுகளை சாப்பிட்டால் உடலில் வியா்க்குரு, சூட்டுக்கட்டிகள் வராமல் இருக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பெரிய வெள்ளரிக்காய்களை சமையலுக்கும் பயன்படுத்துகிறார்கள். இதனால் வெள்ளரிப்பிஞ்சு விற்பனையும் படுஜோராக உள்ளது. அளவுக்கு தகுந்தாற்போல் ஒரு வெள்ளரிப்பிஞ்சு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையும், வெள்ளரிப்பழம் ரூ.30 முதல் ரூ.50 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story