காதல் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: வாலிபருக்கு 8 ஆண்டு கடுங்காவல் சிறை
காதல் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து துமகூரு கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
துமகூரு:
தற்கொலை
துமகூருவை சேர்ந்தவர் அலீம் பாஷா (வயது 27). இவருக்கும் மங்களூருவை சேர்ந்த பீபீ ஆயிஷா என்ற பெண்ணுக்கும் மங்களூருவில் உள்ள தர்காவில் வைத்து பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறி 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் துமகூரு டவுன் உப்பாரஹள்ளி பகுதியில் அலீம் தனது மனைவி பீபீ ஆயிஷாவுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அலீம், பீபீ ஆயிஷாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் பீபீ ஆயிஷா தனது குடும்பத்தினரிடம் இருந்து ரூ.2.30 லட்சம் வாங்கி கொடுத்து உள்ளார். ஆனாலும் கூடுதலாக ரூ.3 லட்சம் கேட்டு பீபீ ஆயிஷாவை, அலீம் கொடுமைப்படுத்தி வந்து உள்ளார். இதனால் மனம் உடைந்த பீபீ ஆயிஷா கடந்த 2018-ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடுங்காவல் சிறை
இந்த சம்பவம் குறித்து பீபீ ஆயிஷாவின் சகோதரி கொடுத்த புகாரின்பேரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அலீமை துமகூரு டவுன் போலீசார் கைது செய்தனர். அவர் மீது துமகூரு மாவட்ட 2-வது கூடுதல் மற்றும் செசன்சு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி மல்லிகார்ஜூனசாமி தீர்ப்பு கூறினார். அப்போது அலீமுக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
Related Tags :
Next Story