சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: தலைமறைவாக இருந்த காங்கிரஸ் பிரமுகரின் சகோதரர் கைது
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த காங்கிரஸ் பிரமுகரின் சகோதரர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு:
தேர்வில் முறைகேடு
கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கான தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் போலீஸ்காரர்கள் உள்பட 13 பேர் நேற்று முன்தினம் வரை கைது செய்யப்பட்டு இருந்தனர். கலபுரகி டவுன் பழைய ஜேவர்கி சாலையில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் போலீஸ் தேர்வு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது அந்த பள்ளியின் உரிமையாளர் திவ்யா தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த நிலையில் போலீஸ் தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரின் பாதுகாப்பு போலீஸ்காரரான அய்யண்ணா தேசாய் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த தேர்வு முறைகேட்டில் அப்சல்புரா பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மராட்டியத்தில் கைது
இதையடுத்து நேற்று முன்தினம் மகாந்தேசை போலீசார் கைது செய்து இருந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ருத்ரேகவுடாவை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் மகாந்தேஷ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது செல்போன் எண்ணுக்கு நேற்று முன்தினம் ருத்ரேகவுடா தொடர்பு கொண்டு உள்ளார். அந்த செல்போன் சிக்னல் டவரை வைத்து போலீசார் ஆய்வு செய்த போது ருத்ரேகவுடா மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதனால் அங்கு விரைந்த சி.ஐ.டி. போலீசார் கோலாப்பூரில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்த ருத்ரேகவுடாவை கைது செய்தனர். பின்னர் அவரை கலபுரகிக்கு அழைத்து வந்த போலீசார், கலபுரகி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் மகாந்தேசும், ருத்ரேகவுடாவும் முறைகேடு செய்து போலீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை வாங்கியதாகவும், தேர்வு எழுத சென்றவர்களுக்கு புளூடூத் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ருத்ரேகவுடாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
இதற்கிடையே இந்த வழக்கில் முறைகேடு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்றதாக கைதான வீரேஷ், பிரவீன்குமார், அருண் பட்டீல், சேத்தன், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் சுமா, சித்தம்மா, சாவித்ரி, தேர்வு முறைகேடு நடந்த பள்ளியின் தலைவர் ராஜேஸ் ஆகிய 8 பேரும் ஜாமீன் கேட்டு கலபுரகி மூன்றாவது ஜே.எம்.எப்.சி. கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி பசவராஜ் நேஜர்கி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சி.ஐ.டி. போலீசாரால் சந்தேகிக்கப்படும் பெங்களூரு விவேக்நகர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் பசனகவுடா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் உடை அணிந்து கொண்டு கலந்து கொண்டார். அதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. அவரிடம் துறைரீதியான விசாரணை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story