குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் பெயர்களும் ரவுடி பட்டியலில் சேர்க்கலாம்; கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு


குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் பெயர்களும் ரவுடி பட்டியலில் சேர்க்கலாம்; கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 24 April 2022 2:12 AM IST (Updated: 24 April 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

நிரபாரதி என்று கோர்ட்டு விடுதலை செய்திருந்தாலும், குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் பெயர்களும் கூட ரவுடி பட்டியலில் சேர்க்கலாம் என்று கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூரு:

ரவுடி பட்டியலில் இருந்து நீக்க...

  கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை ரவுடிகள் ராகேஷ், பிரகாஷ் உள்பட 19 பேர் தாக்கல் செய்திருந்தார்கள். அதாவது குற்ற வழக்குகளில் ஈடுபட்டு, அந்த வழக்கில் கோர்ட்டு நிரபாரதி என்று கூறி விடுதலை செய்திருந்தாலும், தங்களை ரவுடி பட்டியலில் இருந்து போலீசார் நீக்கவில்லை, தங்களது பெயரை ரவுடி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்கள்.

  அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்சித் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் முடிந்திருந்தது. இதையடுத்து, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்சித் தீர்ப்பு கூறினார்.

வழக்கு இல்லாவிட்டாலும் சேர்க்கலாம்

  அப்போது ஒரு ரவுடி குற்றங்களில் ஈடுபட்டு, அந்த வழக்கில் கோர்ட்டு நிரபாரதி என்று விடுதலை செய்திருந்தாலும், அந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்து கொண்டு, அவரது பெயரை ரவுடி பட்டியலில் இருந்து நீக்க முடியாது. ஒருவரை ரவுடி பட்டியலில் சேர்க்கும் முன்பாக போலீசார் பலமுறை ஆலோசித்தும், அதற்கான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு இருந்தால் மட்டுமே ரவுடி பட்டியலில் சேர்த்திருப்பார்கள்.

  குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலும், பிற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு இருந்தாலும், ஒரு நபர் மீது எந்த போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தாலும், அவரது பெயரை ரவுடி பட்டியலில் சேர்க்கலாம். வழக்கு எதுவும் இல்லாமல் குற்றங்களில் ஈடுபட்டாலும் ரவுடி தான். ஒருவர் ரவுடியாக இருந்துவிட்டு மீண்டும் குற்றங்களில் ஈடுபடமாட்டார் என்று சொல்ல முடியாது என்று நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்சித் தீர்ப்பு கூறியுள்ளார்.

Next Story