சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: இடைத்தரகர்கள் பேசிய ஆடியோ வெளியானது; விசாரணை நடத்தப்படும் என அரசு அறிவிப்பு


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: இடைத்தரகர்கள் பேசிய ஆடியோ வெளியானது; விசாரணை நடத்தப்படும் என அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 24 April 2022 2:16 AM IST (Updated: 24 April 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள் பேசிய ஆடியோ உரையாடல் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு

  கர்நாடகத்தில் சமீபத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கான தேர்வு நடந்தது. இதில் முறைகேடு நடந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறைகேடு வழக்கில் போலீஸ்காரர்கள், அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகி வருகிறது.

  இந்த முறைகேடு விவகாரத்தில் நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக குற்ற விசாரணை குழு (சி.ஐ.டி.) போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் நேற்று வரை 14 பேர் கைதாகியுள்ளனர். மேலும் பா.ஜனதா பிரமுகரான திவ்யா தலைமறைவாக இருக்கிறார். பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ் பட்டீல் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கேவின் ஆதரவாளரும் போலீசாரிடம் சிக்கி உள்ளார்.

ஆடியோ வெளியானது

  இந்த நிலையில் கர்நாடகத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக இடைத்தரகர்கள் பேசும் ஆடியோ நேற்று வெளியானது.

  அதாவது இந்த ஆடியோ உரையாடலை நேற்று கலபுரகியில் முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பிரியங்க் கார்கே வெளியிட்டார்.

உரையாடலில் இருப்பது என்ன?

  அந்த ஆடியோவில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து இடைத்தரகர்கள் 2 பேர் பேசும் உரையாடல் போன்று இருக்கிறது. அந்த ஆடியோவில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு தாளில் ரகசிய குறியீடுவை எழுதி வைத்திருப்பது குறித்து 2 பேரும் பேசுகிறார்கள்.

  அந்த ரகசிய குறியீடுவை பார்த்து, தேர்வுதாளை திருத்துபவர்கள் பார்த்து மதிப்பெண் அளித்து அவர்களை தேர்வு செய்து கொள்வாா்கள், வேறு எந்த பிரச்சினையும் வராது என்பது உள்ளிட்ட உரையாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. அந்த ஆடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பெரும் புயலை கிளப்பியுள்ளது.

  இந்த முறைகேடு தொடர்பாக பிரியங்க் கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெரிய திமிங்கலங்கள்

  கர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது. இதுவரை சிறிய மீன்களை மட்டுமே போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட பெரிய திமிங்கலங்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. முறைகேட்டில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த முறைகேடு சம்பந்தமாக கைதாகி உள்ள மகாந்தேஷ் பட்டீல் கூட ஒரு இடைத்தரகர் போல் தான் செயல்பட்டுள்ளார்.

  இந்த முறைகேடு குறித்து சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை. வெறும் கண்துடைப்புக்காக விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யிடம் விசாரணை நடத்தப்படவில்லை. அவர், தற்போதும் கூடுதல் டி.ஜி.பி.யாகவே இருந்து வருகிறார். எந்த தேர்வு மையத்தில் முறைகேடு நடத்தலாம், அங்கு யாரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கலாம் என்பது குறித்து முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

கைதானவருடன் தொடர்பு இல்லை

  நான் வெளியிட்டுள்ள ஆடியோவில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் பெரிய, பெரிய அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டு இருப்பது பற்றி இடைத்தரகர்கள் பேசிக் கொள்வது தெளிவாக உள்ளது. இந்த முறைகேட்டில் எம்.எல்.ஏ.க்கள், உயர் அரசு பதவிகளில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். அவர்களை முதலில் கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும். இந்த வழக்கில் கைதாகி உள்ள மகாந்தேஷ் பட்டீலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பிளாக் காங்கிரஸ் தலைவராக இருந்த அவர், ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

  சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிய அனைத்து தரப்பினரின் எதிர்க்காலமும் முக்கியமாகும். அதனால் 545 பேரும் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்களா? என்பது தெரியவில்லை. ஒரு அரசு தேர்வில் 15 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தால் கூட, அந்த தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. முறைகேடு நடந்திருப்பதால் மறுதேர்வு நடத்தப்படுமா? அல்லது வேறு என்ன முடிவை அரசு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

  சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக வெளியான ஆடியோ குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

  சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த உடனேயே, அதுகுறித்து விசாரணை நடத்த சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தேன். அதன்படி, சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்று நான் பலமுறை கூறி விட்டேன்.

  அந்த கட்சியை சேர்ந்தவர்கள், இந்த கட்சியை சேர்ந்தவர்கள், இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற பிரச்சினைக்கே இடமில்லை. தவறு செய்தவர்கள் எந்த கட்சி, எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. யாரையும் அரசு பாதுகாக்கவும் இல்லை.

ஆடியோ குறித்தும் விசாரணை

  சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. ஒரு ஆடியோ வெளியிட்டு இருப்பதாக சொல்கிறீர்கள். அந்த ஆடியோவை நான் இன்னும் கேட்கவில்லை. பிரியங்க் கார்கேவிடம் இதுபோன்று வேறு எந்த ஆதாரங்கள் இருந்தாலும், அவற்றை சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கும் கேட்டுக் கொள்கிறேன். இது வழக்கு குறித்து விசாரிக்கும் போலீசாருக்கு உதவியாக இருக்கும். ஆடியோவில் பேசி இருப்பவர்கள் யார்?, அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு? குறித்து தெரிய வேண்டும்.

  அதனால் ஆடியோ குறித்தும் விசாரணை நடத்தப்படும். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் இதற்கு முன்பும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் இதற்கு முன்பு நடந்தது, தற்போது நடந்தது உள்ளிட்ட அனைத்து முறைகேடுகள் குறித்தும் போலீசார் விசாரிப்பார்கள். முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப்படியான தண்டனை பெற்று கொடுப்பது இந்த அரசின் நோக்கமாகும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story