‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 April 2022 2:39 AM IST (Updated: 24 April 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி'க்கு பாராட்டு
சேலம் 57-வது வார்டு களரம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தியேட்டர் அருகில் அண்ணா வாத்தியார் தெருவில் குடிநீர் குழாய்களை சீரமைக்க குழிகள் தோண்டப்பட்டன. மழையால் அந்த குழியில் தண்ணீர் நிரம்பி ஆபத்தான நிலையில் உள்ள அதில் வாகன ஓட்டிகள் சிக்கி காயம் அடைகின்றனர் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதனையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் குழியில் மண் போட்டு சரி செய்து பிரச்சினைக்கு தீர்வு கண்டனர். இதற்கான நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-முரளி, களரம்பட்டி, சேலம்.

குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்
தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் அடுத்த ஒட்டப்பட்,டி பில் பருத்தி, குப்பனூர் கிராமங்களுக்கு குழாய் மூலம் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் குழாய் மேம்பாலம் அருகே கழிவுநீர் தேங்கி உள்ள பகுதியின் வழியாக செல்கின்றன. இதனால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து செல்கின்றன. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-துரைராஜ், பழைய ஒட்டப்பட்டி, தர்மபுரி.

பாதியில் நிற்கும் தெருவிளக்கு பணி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெக்காரப்பள்ளி, இந்திரா நகர், லெமன் ட்ரீ லேவுட் ஆகிய பகுதிகளுக்கு மையமாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் தெருவிளக்கு இல்லை. இங்கு மின் கம்பங்கள் மட்டும் நடப்பட்டு கடந்த 6 மாத காலமாக மின் விளக்குகள் பொருத்தாமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இதனால் அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பாதியில் நிற்கும் தெருவிளக்கு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-பெருமாள், ஜெக்கராப்பள்ளி, கிருஷ்ணகிரி.

சாலையோர கழிவுகளால் துர்நாற்றம்
நாமக்கல் பொய்யேரிக்கரை சாலையில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலைக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு சாலை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சாலையோரத்தில் சிலர் குப்பைகள், கழிவுகளை கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சாலையோரம் கழிவுகளை கொட்டுவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், நாமக்கல்.
==
வேகத்தடை அமைக்கப்படுமா? 
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மெயின் ரோடு, ரெயில்வே மேம்பாலம் அருகில் ஏ.எஸ்.டி.சி. நகர், டி.என்.வி. நகர், சத்யா நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. பென்னாகரம் பகுதியில் இருந்து தர்மபுரி நோக்கி வரும் சாலையில் ரெயில்வே மேம்பாலத்திற்கு முன் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே  பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி அங்கு வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
-மாரிமுத்து ,சத்யா நகர், தர்மபுரி.

நோய் பரவும் அபாயம்
சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் அத்வைத ஆசிரம் ரோட்டில் இருபுறமும் உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுதொல்லை அதிகரித்துள்ளதால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
-ஜோசப், அத்வைத ஆசிரம் ரோடு, சேலம்.

Next Story