நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 24 April 2022 2:45 AM IST (Updated: 24 April 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது

நெல்லை:
நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிரம்மோற்சவ விழா
நெல்லை மாவட்டத்தில் பழமையான வைணவ தலங்களில் ஒன்றான நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும். கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கடந்த 19-ந்தேதி கருட சேவை நடைபெற்றது.
இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா 9-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து யாக சாலை பூஜையும் நடந்தது. 
தேரோட்டம்
பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தி கோஷம் முழங்க, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 ரதவீதிகள் வழியாக தேர் அசைந்தாடி வந்து மீண்டும் நிலையத்தை அடைந்தது.
தேரோட்டத்தையொட்டி மின்சார வாரியம் சார்பில் உதவி செயற்பொறியாளர் சார்லஸ் தலைமையில் ஊழியர்கள் மின்ஒயர்களை அப்புறப்படுத்தினர். தேரோட்டம் முடிந்த பிறகு மீண்டும் ஒயர்கள் இணைக்கப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டது.
10-ம் நாள் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

Next Story