சிறுமிக்கு பாலியல் தொல்லை-வாலிபருக்கு 5 ஆண்டு சிறை; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொல்லை-வாலிபருக்கு 5 ஆண்டு சிறை; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 24 April 2022 2:51 AM IST (Updated: 24 April 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிா் கோா்ட்டு தீா்ப்பு கூறியது.

ஈரோடு
பவானி அருகே உள்ள ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 28). கூலித்தொழிலாளி. இவர் ஈரோட்டை சேர்ந்த 9 வயது சிறுமியிடம் நட்புடன் பழகி வந்தார். இந்த பழக்கத்தை பயன்படுத்தி கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் சதீஸ்குமார், சிறுமிக்கு பூ வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி தன்னுடன் அழைத்து சென்றார். அவர் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு விவசாய தோட்டத்துக்கு அழைத்து சென்று, அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சதீஷ்குமாரை கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரை கடந்த 20-ந் தேதி போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைந்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக சதீஷ்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும், சிறுமியை தாக்கிய குற்றத்துக்காக 3 மாதம் சிறை தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரை செய்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

Next Story