‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 24 April 2022 3:11 AM IST (Updated: 24 April 2022 3:11 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கழிப்பறை வேண்டும்
 பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது புதுக்காடையம்பட்டி. இங்கு ஆண்களுக்கு என்று தனியாக கழிப்பறை இல்லை. இதனால் பொது இடங்களையே கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே புதுக்காடையம்பட்டியில் ஆண்களுக்கான கழிப்பறை கட்டித்தர உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுக்காடையம்பட்டி. 

ரோட்டோரம் குவிந்த குப்பை
வாணிப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சத்தி-அத்தாணி மெயின் ரோட்டின் ஓரத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் காற்று அடிக்கும் போது குப்பை துகள்கள் பறந்து இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது படுகிறது. எனவே வாணிப்புத்தூர் பேரூராட்சி நிர்வாகம் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். 
 பொதுமக்கள், வாணிப்புத்தூர்.

சாய்ந்து கிடக்கும் குப்பை தொட்டி
பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தில் விதைப்பண்ணை சுற்றுச்சுவர் அருகே குப்பை தொட்டி சாய்ந்து கிடக்கிறது. இதனால் குப்பைகளை தொட்டியில் போடாமல் அதை சுற்றி போட்டுள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் குப்பை தொட்டியை நேராக வைத்தால் சிதறி கிடக்கும் குப்பைகளை பொதுமக்கள் தொட்டியில் போடுவார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? 
ரேணுகாதேவி, விநாயகர் நகர். 

தேங்கிய கழிவுநீர்
ஈரோடு சாஸ்திரி நகர் அடுத்துள்ள குறிஞ்சி நகரில் (வார்டு 55). ஒரு கொப்பு வாய்க்கால் உள்ளது. இந்த கொப்பு வாய்க்காலில் தற்போது கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அதில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி, அந்த பகுதி மக்களின் தூக்கத்தை கெடுக்கின்றன. மேலும் சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குறிஞ்சி நகரில் தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
குப்புசாமி, சாஸ்திரிநகர். 

போக்குவரத்துக்கு இடையூறு
திருச்சி, கரூர், கோவையில் இருந்து ஈரோடு பஸ்நிலையத்துக்கு வரும் அனைத்து பஸ்களும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வாசுகி வீதி மற்றும் அகில்மேடு வீதி வழியாகத்தான் வருகின்றன. ஆனால் இந்த 2 வீதிகளிலும் கடைகளின் முன்னால் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் அகில் மேடு வீதியிலும், வாசுகி வீதியிலும் கடைகளின் முன்பு இருசக்கர வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுவதை தடுப்பார்களா?
அருள்மொழி, ஈரோடு. 

குண்டும்-குழியுமான சாலை
ஈரோடு பெரியசேமூர் எல்.வி.ஆர்.காலனியில் குண்டும்-குழியுமாக சாலை காணப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் ரோடு போடும் பணி நடந்தது. ரோட்டில் ஜல்லி கற்களை போட்டு விட்டு அப்படியே சென்று விட்டனர். கடந்த ஒரு மாத காலமாக அப்படியே கிடக்கிறது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே குண்டும்-குழியுமான இந்த சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவா, ஈரோடு.

Next Story