மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கோடை மழை


மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கோடை மழை
x
தினத்தந்தி 24 April 2022 3:17 AM IST (Updated: 24 April 2022 3:17 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்தது.

ஈரோடு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்தது.
பலத்த மழை
பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் மதியம் 1 மணி வரை கடுமையான வெயில் அடித்தது. மதியம் 3½ மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. உடனே இடி- மின்னலுடன் கோடை மழை பெய்ய தொடங்கியது. 
சுமார் 1 மணி நேரம் நிற்காமல் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பவானி மேட்டூர் ரோட்டில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டார்கள். 
கோரிக்கை
பவானி புதிய பஸ் நிலையத்தில் இருந்து குருப்பநாயக்கன்பாளையம் விதைப்பண்ணை சாலை வரை உள்ள சாக்கடைகளில் தூர்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. 
இதனால் மழை பெய்யும்போது ரோட்டில் தேங்கும் தண்ணீர் சாக்கடை வடிகாலுக்கு செல்லாமல் அப்படியே சாலையிலேயே நின்று விடுகிறது. அதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் உள்ள சாக்கடைகளை நகராட்சி அதிகாரிகள் உடனே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பவானி பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்தது. 
அந்தியூர்
இதேபோல் அந்தியூா், தவுட்டுப்பாளையம், அத்தாணி, நகலூர், பெருமாபாளையம், வேம்பத்தி, வெள்ளாளபாளையம், ஆப்பக்கூடல், பிரம்மதேசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி அளவில் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இரவு 7 மணி வரை பலத்த மழை பெய்தது. 
இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக அந்தியூரை அடுத்த தவுட்டுப்பாளையம், பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் ரோட்டில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.  மேலும் அந்தியூர் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.  
தாளவாடி
தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். 
இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை முதல் கடும் வெயில் வாட்டி எடுத்தது. மாலை 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் சாரல் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து தாளவாடியை அடுத்த கெட்டவாடி, பனக்கள்ளி, திகினாரை, பையனாபுரம், ஜீர்கள்ளி, ஏரகனள்ளி ஆகிய பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கொட்டி தீர்த்த கோடை மழையால் ரோட்டில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 
ஊஞ்சலூர்- கொடுமுடி
ஊஞ்சலூர், இச்சிப்பாளையம், தாமரைப்பாளையம், கொளாநல்லி, நடுப்பாளையம், கருமாண்டாம்பாளையம், சோளங்காபாளையம், பாசூர், பழனிக்கவுண்டன் பாளையம் ஆகிய பகுதிகளில் மாலை 6.15 மணி முதல் இரவு 7.15 மணி வரை பலத்த காற்றுடன் கோடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஊஞ்சலூர் பகுதியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.
கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 5 மணி முதல் சூறாவளிக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1½ மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. 

Next Story