இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை: சேலத்தில் 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
சேலத்தில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சுமார் 100 வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
சேலம்,
பலத்த மழை
சேலம் மாநகரில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மழை எதுவும் பெய்யவில்லை. இதையடுத்து மாலை 5 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 7.30 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
சூரமங்கலம், பள்ளப்பட்டி, அழகாபுரம், அஸ்தம்பட்டி, சங்கர் நகர், அம்மாபேட்டை, குகை, அன்னதானப்பட்டி, பெரமனூர், பழைய மற்றும் புதிய பஸ்நிலையம், கொண்டலாம்பட்டி, கிச்சிப்பாளையம், செவ்வாய்பேட்டை, லீ பஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.
வீடுகளில் தண்ணீர் புகந்தது
இந்த மழையால் சின்னேரிவயல்காடு நேதாஜி தெருவில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் இரவில் தூங்க முடியாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டனர். குறிப்பாக சில வீடுகளில் வயதான முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வீடுகளில் இருந்த பொருட்கள் தண்ணீரில் நனைந்து சேதமானது.
இதேபோல், களரம்பட்டி, கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, பெரமனூர் நாராயணப்பிள்ளை தெரு, மணக்காடு ராஜகணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சரிவர சாக்கடை கால்வாய் வசதி மற்றும் வடிகால் வசதி இல்லாததால் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இந்த பகுதிகளில் உள்ள தெருக்களில் தண்ணீர் வெள்ளம்போல் ஆறாக ஓடியது.
பொதுமக்கள் அவதி
அஸ்தம்பட்டி, பெரமனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டது. இதனால் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்திலும், பழைய நாட்டாண்மை கட்டிட வளாகத்திலும் தண்ணீர் குளம்போல் தேங்கியது. ஜங்ஷன் மெயின் ரோட்டில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
மரங்கள் சாய்ந்தன
இதேபோல் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் மற்றும் தென்னை, பனை மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில தென்னை, பனை மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் வருவாய்த்துறையினர் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story