பா.ஜ.க.வை கண்டித்து த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வை கண்டித்து த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 April 2022 10:58 AM IST (Updated: 24 April 2022 10:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க.வை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

டெல்லி ஜஹாங்கீர்பூரில் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, பா.ஜ.க.வை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. தலைமை நிர்வாக குழு உறுப்பினரும், மணப்பாறை எம்.எல்.ஏ.வுமான ப.அப்துல் சமது தலைமை தாங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடமாநிலங்களில் மத ஊர்வலங்களை நடத்தி, அதன் மூலம் முஸ்லிம் வெறுப்புகளை உண்டாக்குகின்ற வகையில் மத வன்முறை கோஷங்களை எழுப்பி, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை பா.ஜ.க. நடத்தி வருகிறது. அந்தவகையில், அனுமன் ஜெயந்தி என்ற பெயரில் ஜஹாங்கீர்பூரில் ஊர்வலம் நடத்தி முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களையும், பள்ளிவாசல்களையும் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் ஏற்பட்ட கலவரங்களை தட்டிக்கேட்ட, அதற்கு எதிராக நின்ற முஸ்லிம் மக்களின் வீடுகளை பா.ஜ.க. அரசு இடித்து தகர்த்துள்ளது. இதனை கண்டித்து தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். ஜனநாயக சக்திவாய்ந்த கட்சியினர் ஓரணியில் திரண்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். பா.ஜ.க.வுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story