சென்னை விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.2¼ கோடி போதை பவுடர் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.2¼ கோடி போதை பவுடர் பறிமுதல்
x
தினத்தந்தி 24 April 2022 1:31 PM IST (Updated: 24 April 2022 1:31 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள போதை பவுடரை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு சரக்கக பிரிவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய வந்த ஒரு பார்சல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த்து. அந்த பார்சலை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கர் உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அந்த பார்சலில் துணிகள், புத்தகம் ஏற்றுமதி செய்யப்படுவதாக இருந்தது. பார்சல் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அதனை பிரித்து பார்த்தனர். அப்போது துணிகள், புத்தகங்களுக்கு நடுவில் ஒரு பெட்டி இருந்தது. அந்த பெட்டியை பிரித்து பார்த்தபோது, அதற்குள் ‘மெத் கிரிஸ்டல்ஸ்’ என்ற போதை பவுடர் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 920 கிராம் உயர் ரக போதை பவுடரை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தபோது, பார்சலில் இருந்த அனுப்பியவரின் முகவரியும், பார்சல் செல்ல இருந்த முகவரியும் போலி என தெரியவந்தது.

சென்னை விமான நிலைய சரக்ககப்பிரிவு மூலம், போதை பொருள் கடத்தல் தொடர்ந்து தடுக்கப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story