போலீஸ் போல் நடித்து நகை கடை அதிபர் கடத்தல் - போக்குவரத்து போலீஸ் சோதனையில் 7 பேர் கும்பல் தப்பி ஓட்டம்


போலீஸ் போல் நடித்து நகை கடை அதிபர் கடத்தல் - போக்குவரத்து போலீஸ் சோதனையில் 7 பேர் கும்பல் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 24 April 2022 1:43 PM IST (Updated: 24 April 2022 1:43 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் போல் நடித்து நகை கடை அதிபரை மோட்டார் சைக்கிளில் கடத்திய 7 பேர் கொண்ட கும்பலை, போக்குவரத்து போலீஸ்காரர் விசாரித்ததால் தப்பி ஓடிவிட்டனர்.

செங்குன்றம்,

சென்னை முகப்பேர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ராபின் ஆரோன்(வயது 35). இவர் முகப்பேர் பகுதியில் நகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். ராபின் ஆரோன் நேற்று முன்தினம் திருப்பதியில் சொந்தமாக நகைக்கடை திறப்பதற்காக சென்றுவிட்டு, மீண்டும் காரில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

புழல் சிறை அருகே ஜி.என்.டி. சாலையில் வந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், ராபின் ஆரோனின் காரை வழிமறித்து நிறுத்தியது. பின்னர் அவரை காரில் இருந்து கீழே இறக்கிய கும்பல், “நாங்கள் கொருக்குப்பேட்டை போலீஸ் நிலைய தனிப்படை போலீசார். எங்களிடம் பிடிவாரண்டு உள்ளது” என்று கூறி தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ராபின் ஆரோனை வலுக்கட்டாயமாக ஏற்றிச்சென்றனர்.

புழல் சைக்கிள் ஷாப் அருகே அவரை அழைத்துச்சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ஆனந்தகுமார் என்பவருக்கு, இவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே அவர்களிடம் விசாரித்தார்.

போக்குவரத்து போலீஸ்காரரை கண்டதும் பயந்துபோன 7 பேர் கொண்ட கும்பல், ராபின் ஆரோனை அங்கேயே விட்டுவிட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்றனர். பின்னர்தான் மர்ம நபர்கள் போலீஸ் போல் நடித்து தன்னை மோட்டார் சைக்கிளில் கடத்தியது ராபின் ஆரோனுக்கு தெரியவந்தது.

பின்னர் இதுபற்றி ராபின் ஆரோன் அளித்த புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தல் கும்பல் யார்?, எதற்காக நகை கடை அதிபரை கடத்தினார்கள்? என விசாரித்து வருகின்றனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story