கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்று கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்; அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்று கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்; அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x
தினத்தந்தி 24 April 2022 5:39 PM IST (Updated: 24 April 2022 5:39 PM IST)
t-max-icont-min-icon

கிராம சபை கூட்டங்களில் அனைத்து மக்களும் பங்கேற்று தங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை

கிராம சபை கூட்டங்களில் அனைத்து மக்களும் பங்கேற்று தங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

 சிறப்பு கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பவித்திரம் ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியார் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சிகள் உள்ளன. அனைத்து கிராமங்களும் வளர்ச்சி பெற்று தன்னிறைவு பெற்ற கிராமங்களை கொண்ட மாவட்டமாக திகழ வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி அனைத்து ஊராட்சிகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

 கிராமங்களின் வளர்ச்சிக்கு...

கிராமங்கள் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து  இனி வரும் காலங்களில் கிராம சபை கூட்டங்கள் ஆண்டுக்கு 6 முறை நடைபெறும் என முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். இவ்வாறு நடைபெறும் கூட்டங்களில் அனைத்து மக்களும் தவறாமல் பங்கேற்று, தங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார். 

அதைத் தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் நிலைத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது. பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோரது குடும்ப உறுப்பினர்களுக்கு முதல் -அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலை 2 குடும்பங்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். 
மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் பி.எம். கிசான் அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 

கூட்டத்தில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) லட்சுமி நரசிம்மன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத்தலைவர் ரமணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஞானசவுந்தரி மாரிமுத்து, ஆரஞ்சி ஆறுமுகம், பவித்திரம் ஊராட்சி மன்ற தலைவர் வேளாங்கண்ணி, திருவண்ணாமலை ஒன்றிய ஆணையாளர் அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) லட்சுமி, தி.மு.க. மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Next Story