‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 April 2022 6:39 PM IST (Updated: 24 April 2022 6:39 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் வசதி தேவை
நெல்லை தாழையூத்து பகுதியில் இருந்து வண்ணார்பேட்டைக்கு காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரையிலான நேரத்தில் போதுமான அரசு டவுன் பஸ்கள் இல்லை. அதற்கு முன்பாகவே ஒரே நேரத்தில் அனைத்து அரசு பஸ்களும் போட்டி போட்டிக் கொண்டு சென்று விடுகின்றன. இதனால் மேற்குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இல்லாமல் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் போதுமான பஸ்களை இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலா, தாழையூத்து.

தேங்கி கிடக்கும் சாக்கடைநீர்

நெல்லை மேலப்பாளையத்தில் ரெட்டியார்பட்டி சாலையில் சமீபத்தில் பெய்த மழையில் நீர் வெளியே செல்லாமல் ஆக்கிரமிப்பின் காரணமாக சாலையிலேயே தேங்கியிருந்தது. மேலும் இப்பகுதியில் உள்ள சாக்கடைநீரும் அதில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுநீரில் தான் மக்கள் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேங்கி கிடக்கும் கழிவுநீரையும் அப்புறப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காதர் மீரான், மேலப்பாளையம்.

பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து பத்தமடை, ேசரன்மாதேவி, முக்கூடல் வழியாக தென்காசி மாவட்டம் கடையம் வரை இயங்கி வந்த அரசு பஸ்கள் பல மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
டார்வின், சேரன்மாதேவி.

காட்சிப்பொருளான தண்ணீர் தொட்டி

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா அச்சங்குட்டம் கிராமத்தில் ஊருக்கு மேற்கே பெருமாள் கோவில் அருகில் உள்ள  சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் கடந்த ஒரு வருட காலமாக தண்ணீர் நிரப்பப்படவில்லை. இதனால் நீர்த்தேக்க தொட்டி வெறுமனே காட்சி பொருளாகவே உள்ளது. இதனை அதிகாரிகள் கவனித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
சுதன், அச்சங்குட்டம்.

தெரு நாய்கள் தொல்லை
கடையம் யூனியன் தெற்கு கடையம் பஞ்சாயத்து தங்கம்மன் கோவில் தெரு, பத்திரகாளியம்மன் கோவில் தெருக்களில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றவர்களை கடிக்கின்றன. எனவே தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.திருக்குமரன், கடையம்.

குண்டும், குழியுமான சாலை

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி- பாப்பான்குளம் செல்லும் சாலை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். ஆகையால் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
அருணா, அம்பை.

மின்மாற்றி அவசியம்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பொன்ராஜ் நகர் பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடுகளுக்கு குறைவான மின்அழுத்த மின்சாரமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வீட்டில் உள்ள மின்சாதனங்களை சரியாக இயக்க முடியாமல் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் மின்சாதனங்கள் பழுதடைந்து அதிகப்படியான செலவினை ஏற்படுத்துவதுடன், மிகுந்த மனஉளைச்சலும் ஏற்படுகிறது. எனவே பொன்ராஜ்நகர் பகுதிக்கு மின்மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், பொன்ராஜ்நகர். 

சாலைப்பணிகள் விரைவுபடுத்தப்படுமா?

தூத்துக்குடி புதுக்கோட்டை- பாளையங்கோட்டை ரோட்டில் திருமண மண்டபம் அருகில் உள்ள பாலத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டு சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக எந்தவித பணியும் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி சிறு விபத்துகளும், காலை, மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிலும் ஏற்படுகிறது. 10 மீட்டர் அகலம் கொண்ட சாலையில் தற்போது 3.5 மீட்டர் அகலத்திலேயே போக்குவரத்து நடைபெறுகிறது. எனவே பணிகளை விரைந்து முடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராமன், புதுக்கோட்டை.

Next Story