கன்னிமாரா நூலகத்தில் உலக புத்தக தின விழா


கன்னிமாரா நூலகத்தில் உலக புத்தக தின விழா
x
தினத்தந்தி 24 April 2022 6:52 PM IST (Updated: 24 April 2022 6:52 PM IST)
t-max-icont-min-icon

கன்னிமாரா நூலகத்தில் உலக புத்தக தின விழா நிகழ்ச்சி குடிமையியல் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

உலக புத்தக தினத்தையொட்டி சென்னை, எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் வாசிப்பு, நூலகத்தின் பயன்கள், உலக புத்தக தினத்தின் சிறப்பு குறித்து வாசகர்கள் மற்றும் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நூலகத்தின் குறிப்புதவியாளர் லோ.புகழானந் தலைமை தாங்கி பேசும்போது, ‘குடிமையியல் மாணவர்கள் நலன் கருதி பொது நூலகத்துறை இயக்குனர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் போட்டி தேர்வுக்கான நூல்களை அனுப்பி உள்ளார். இதனை மாணவர்கள் முறையாக பயன்படுத்தி தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைக்க உலக புத்தகத் தினத்தில் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

நுழைப்புலம் வாசிப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நல்லு இரா.லிங்கம், பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ம.பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நூலகத்தின் சிறப்பு, வாசிப்பு குறித்து பேசினார்கள். தொடர்ந்து போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களின் சந்தேகங்களுக்கு விடைகளும் அளிக்கப்பட்டது. அரிய நூல்களையும் மாணவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுக்கு கன்னிமாரா பொதுநூலகம் அளித்து வரும் நூல்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொண்டனர். நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். கன்னிமாரா பொது நூலக உதவி நூலகர் பா.ரத்தினமாலா நன்றி கூறினார்.

இதேபோல் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள கிளை நூலகத்திலும் உலக புத்தக தினத்தை முன்னிட்டு மே 1-ந்தேதி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியை திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.


Next Story