கூடலூரில் கிளைக்கழக தேர்தலில் வேட்புமனு தாக்கலில் தி.மு.க.வினர் இடையே கைகலப்பு


கூடலூரில் கிளைக்கழக தேர்தலில் வேட்புமனு தாக்கலில் தி.மு.க.வினர் இடையே கைகலப்பு
x
தினத்தந்தி 24 April 2022 7:08 PM IST (Updated: 24 April 2022 7:08 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் கிளைக்கழக தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்தபோது தி.மு.க.வினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்


கூடலூரில் கிளைக்கழக தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்தபோது திமுகவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வேட்புமனு தாக்கல் - வாக்குவாதம்

திமுக கிளை கழக தேர்தல் நடத்தப்படும் என திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையொட்டி மாநிலம் முழுவதும் உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் செய்வதில் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கூடலூர் நகர கிளைக் கழக அலுவலகத்தில் உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள்  நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது திமுகவினர் பலர் கட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றனர். இந்த சமயத்தில் கட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறுவதை ஒருவர் வீடியோ எடுத்தார். இதற்கு நகர செயலாளர் ராஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு திமுக கவுன்சிலர் சத்தியன், சந்தானம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியை வீடியோ எடுப்பதால் என்ன பிரச்சனை என பதிலுக்கு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கட்சியினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

கைகலப்பு- பரபரப்பு

தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒருவரை ஒருவர் சரமாரியாக மோதிக் கொண்டனர்.இதனால் ஒரே கூச்சலும் குழப்பமும் நிலவியது..இதைத்தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் திமுக அலுவலகத்துக்கு ஓடி வந்தனர். இந்த சமயத்தில் கட்சி நிர்வாகி ரசாக் இருதரப்பினரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரையும் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் திமுகவினருக்கு இடையே மீண்டும் கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பையும் திமுக நிர்வாகிகள் பாண்டியராஜ், சீனி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி அனுப்பினர். இதைத்தொடர்ந்து திமுகவினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story