அனைத்து துறைகளிலும் இந்தியா சிறந்து விளங்கும்
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா சிறந்து விளங்கும் என்று அரவிந்தர் 150-வது விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா பேசினார்
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா சிறந்து விளங்கும் என்று அரவிந்தர் 150-வது விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா பேசினார்.
அரவிந்தர்
புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள கன்வென்சன் சென்டரில் இன்று அரவிந்தரின் 150-வது ஆண்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்டு ‘அரவிந்தரும், இந்திய அரசியலமைப்பும்’ என்ற புத்தகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார். அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
அரவிந்தரின் படைப்புகள்
மகான் அரவிந்தர் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்டார். தேசத்தின் ஆன்மாவை யாராவது அறிய வேண்டுமானால் அவர்கள் அரவிந்தரின் படைப்புகளை படிக்கவேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்காக அரவிந்தர் தீவிரமாக உழைத்தார்.
புதிய சக்தி மற்றும் வழிகாட்டுதல்களை இந்திய கலாசாரத்துக்கு அரவிந்தர் வழங்கினார். அவரது வழிகாட்டுதலை இளைய சமுதாயம் பின்பற்ற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவரது 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம் நிறைவடையாது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், துவாரகா முதல் வங்காளம் வரையிலும் நாம் ஒரே கலாசாரத்துடன் உள்ளோம். அரவிந்தர் இந்திய கலாசாரத்துக்கு புதிய ஆற்றல் மற்றும் உணர்வினை வழங்கினார்.
சிறந்து விளங்கும்
பிரதமரின் முடிவின்படி ஆசாதிகா அம்ருத் மகோற்சவ் கொண்டாடப்படுகிறது. இதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை தெரிந்துகொள்வது, சுதந்திர போராட்டம் தொடர்பான சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் புத்துயிரூட்டுவது, கடந்த 75 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் இந்தியா சிறந்து விளங்கும்.
ஸ்வராஜ் என்ற கருத்தை அரவிந்தர் முன்வைத்தார். உலகின் பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி இந்தியாவுக்கு இருப்பதாகவும் நம்பினார். ஸ்வராஜ் என்பது அரசியல் அதிகாரத்தை மட்டும் குறிக்கவில்லை. அது இந்தியாவின் பூர்வீக கொள்கைகள், கலாசாரத்தின் கருத்துகள் மற்றும் அதன் சிறந்த மரபுகளை முன்னெடுத்துச் செல்வதையும் குறிக்கிறது.
ஆன்மிக தேசியவாதம்
நாட்டிற்கு ஒரு விலைமதிப்பற்ற பாரம்பரியம், எந்த வெற்றியையும் எதிர்பார்க்காமல் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கான யோசனையை அரவிந்தர் நமக்கு வழங்கினார்.
அவர் அரசியல் நடவடிக்கையின் ஒரு முக்கியமான கோட்பாட்டை முன்வைக்க முயன்றார். இது ஒரு வகையில் ஆன்மிக தேசியவாதம் என்றும் அழைக்கப்படலாம். மேலும் அவர் முதன்முறையாக தேசம் என்ற கருத்தை முன்வைத்தார்.
அரவிந்தரின் கல்வி தொடர்பான கருத்துகள் நமது பிரதமரின் புதிய கல்விக்கொள்கையை கவனமாக படித்தால் எல்லா இடங்களிலும் தெரியும். இந்தியாவை ஒருபோதும் சிறியதாக எண்ணக்கூடாது. நாம் அடிமைகளாக இருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் நமது சிந்தனை மற்றும் பண்டைய கலாசாரம் ஒருபோதும் சிறியதாக சிந்திக்க அனுமதிக்காது.
கற்பனை இந்தியா
அரவிந்தரின் கருத்துகளை ஊக்குவிப்பதில் தொடர்புடையவர்கள், இளைஞர்கள் மற்றும் நாட்டில் உள்ள கல்வி முறை மீது கவனம் செலுத்த வேண்டும். இந்த 3 விஷயங்களும் அரவிந்தரின் எண்ணங்களுடன் இணைந்தால் அரவிந்தரின் கற்பனை இந்தியாவை அடைவது கடினம் அல்ல.
அரவிந்தருக்கு 75 வயது ஆனபோது நாடு சுதந்திரம் அடைந்தது. நாம் இப்போது அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவினை கொண்டாடுகிறோம். இந்த நாடு தனது 75-வது சுதந்திரத்தை கொண்டாடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங், அரபிந்தோ சொசைட்டியின் தலைவர் பிரதீப் நரங்க், நிர்வாகிகள் விஜய்கோத்ரா, மனோஜ்தாஸ் குப்தா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story