பா.ஜ.க. பினாமி ஆட்சி நடத்துகிறது
முதல்-அமைச்சர் ரங்கசாமியை கைப்பாவையாக வைத்து கொண்டு பா.ஜ.க. பினாமி ஆட்சி நடத்துகிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமியை கைப்பாவையாக வைத்து கொண்டு பா.ஜ.க. பினாமி ஆட்சி நடத்துகிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
போராட்டம்
புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணி சார்பில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காமராஜர் சாலையில் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆகிறது. ஆனால், 2021-ம் ஆண்டு தேர்தலில் போது பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களுக்கு வேதனை தான் மிஞ்சுகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தவித பலனும் இல்லை. மக்கள் நலத்திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்தும் கூடுதல் நிதி கிடைக்கவில்லை.
புதுச்சேரி புறக்கணிப்பு
புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ஆனால் இதுவரை மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. புதுவையை மத்திய நிதி கமிஷனில் சேர்க்கவில்லை. மாநில அரசின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. புதுவைக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கோரிக்கை வைத்தார். அதையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தை ஒட்டுமொத்தமாக பிரதமரும், உள்துறை மந்திரியும் தொடர்ந்து புறக்கணிக்கின்றனர்.
பினாமி ஆட்சி
மோடி அரசு புதுச்சேரி வளர்ச்சிக்காக புதிதாக எதுவும் கொடுக்கவில்லை. பா.ஜ.க.வினர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை கைப்பாவையாக வைத்து கொண்டு பினாமி ஆட்சி நடத்துகின்றனர். கவர்னர் சூப்பர் முதல்-அமைச்சராக செயல்படுகிறார். 10 ஆயிரம் பேருக்கு உடனடியாக வேலை கொடுப்போம் என்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் காவல்துறை தவிர்த்து ஒருவருக்கு கூட வேலை வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story