அனுமதியின்றி நடந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் மாடு முட்டி தொழிலாளி பலி


அனுமதியின்றி நடந்த  இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் மாடு முட்டி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 24 April 2022 8:38 PM IST (Updated: 24 April 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

போடியில், அனுமதியின்றி நடந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில், மாடு முட்டி வேடிக்கை பார்க்க வந்த தொழிலாளி பலியானார்.

போடி:

 இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
தி.மு.க. சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம், தேனி மாவட்டம் போடி குரங்கணி சாலையில் உள்ள இரட்டைவாய்க்கால் அருகே இன்று காலை நடந்தது.
இதனை தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பந்தயத்தில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. 
போட்டியை பார்ப்பதற்கு போடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் திரளாக கூடி இருந்தனர். பந்தயத்தில் காளைகள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு ஓடின. 

மாடு முட்டி தொழிலாளி சாவு
அப்போது, பார்வையாளர்கள் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்த போடி புதூரை சேர்ந்த ராமர்(வயது 40) என்ற தொழிலாளியை, பந்தயத்தில் ஓடிக்கொண்டு இருந்த மாடு கொம்பால் முட்டி தூக்கி வீசியது. 
இதில் அவருக்கு  மார்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக போடி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்தியது தெரியவந்தது.  

 தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு
இதையடுத்து அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக ஒன்று கூடி, ரோட்டை மறித்து, போக்குவரத்து இடையூறு செய்து, கவனக்குறைவாக மாட்டு வண்டி பந்தயம் நடத்தியதாக கம்பம் தேரடி தெருவை சேர்ந்த ரஞ்சித் குமார் (47), கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த மகேஷ்வரன், வாய்க்கால்பட்டியை சேர்ந்த பாரத் மற்றும் தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாடு முட்டி பலியான ராமருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இரட்டைமாட்டு வண்டி பந்தயத்தை வேடிக்கை பார்க்க வந்த தொழிலாளி, மாடு முட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story