சிவமொக்கா விமான நிலையத்திற்கு எனது பெயரை சூட்ட வேண்டாம்; எடியூரப்பா கடிதம்
சிவமொக்கா விமான நிலையத்திற்கு எனது பெயரை சூட்ட வேண்டாம் என்று கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பெரிய தலைவர்கள்
சிவமொக்காவின் நீண்ட நாள் கனவான விமான நிலைய திட்டம் நனவாகிறது. சமீபத்தில் தாங்கள் சிவமொக்கா விமான நிலைய பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டீர்கள். அத்துடன் கூடுதல் நிதியை விடுவிப்பதாகவும் அறிவித்தீர்கள். இதற்காக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சிவமொக்கா விமான நிலையத்திற்கு எனது பெயரை சூட்டுவதாக அறிவித்துள்ளீர்கள். என் மீதான தங்களின் அன்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதற்காக சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட பெரிய தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் வழங்கிய பங்களிப்புடன் ஒப்பிடும்போது, நான் ஆற்றிய சேவை மிகச்சிறியது தான்.
பெயரை சூட்ட வேண்டாம்
அதனால் சிவமொக்கா விமான நிலையத்திற்கு எனது பெயரை சூட்டுவது என்பது பொருத்தமானது அல்ல என்று நான் நினைக்கிறேன். எனவே விமான நிலையத்திற்கு எனது பெயரை சூட்ட வேண்டாம். மேலும் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்து, கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கிய தலைவர்களில்ஒருவரின் பெயரை சூட்டவேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story