வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் இரும்பு மேஜைகளை அடித்து உடைத்த மாணவர்கள்
வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் இரும்பு மேஜைகளை அடித்து உடைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
வேலூர்
வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் இரும்பு மேஜைகளை அடித்து உடைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
இரும்பு மேஜைகள் உடைப்பு
வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 800 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) செய்முறை தேர்வு தொடங்க உள்ளது. இதையொட்டி தொரப்பாடி பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு வழக்கமான நேரத்தை விட ஒருமணி நேரம் முன்பாக பள்ளி விடப்பட்டது.
ஆனால் பிளஸ்-2 மாணவர்கள் சிலர் பள்ளியை விட்டு செல்லாமல் வகுப்பறையில் அமர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை வீட்டுக்கு செல்லும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தினர். அதையடுத்து சில மாணவர்கள் அங்கிருந்து சென்றனர். ஆனால் சில மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர்.
மாணவர்கள் மீது நடவடிக்கை
அதன் உச்சகட்டமாக வகுப்பறையில் உள்ள இரும்பு மேஜைகளை தரையில் போட்டு அடித்தும், அவற்றின் மீது ஏறி நின்று குதித்தும், காலால் எட்டி உதைத்தும் உடைத்துள்ளனர். இதைக்கண்ட ஆசிரியர்கள் இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிறிதுநேரத்தில் போலீசார் பள்ளி வளாகத்துக்குள் வந்தனர். இதைக்கண்ட பமாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மாணவர்கள் இரும்பு மேஜையை உடைக்கும் காட்சிகள் முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமியிடம் கேட்டதற்கு, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் இன்று (திங்கட்கிழமை) தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளார். வீடியோவில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்பேரில் இரும்பு மேஜைகளை உடைத்த மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலங்களில் மாணவர்கள் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story