கிராமசபை கூட்டத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
காவனூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் வீடு கேட்டு, மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கே.வி.குப்பம்
காவனூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் வீடு கேட்டு, மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடு கேட்டு மனு
கே.வி.குப்பம் அடுத்த சீதாராமன் பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, இவரது மனைவி கலா (வயது 70). கணவனை இழந்தவர். இவருக்கு 2 மகள்கள் உண்டு. மூத்த மகள் சேமளாவுக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளனர். இவர் கணவனால் கைவிடப்பட்டு உள்ளார். மற்றொரு மகள் வெண்ணிலா (30). திருமணம் ஆகாதவர்.
இவர்களுடன் அரசு கொடுத்த இடத்தில் மண் வீடு கட்டி வசித்து வரும் கமலா கூலிவேலை செய்து வருகிறார். இவர்கள் வேறு யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கேட்டு கலா, தமிழ்நாடு முதல்-அமைச்சர் வரை மனுக்கள் அனுப்பி, பலமுறை அதிகாரிகளை சந்தித்து வந்துள்ளார்.
தீக்குளிக்க முயற்சி
ஆனால் வீடு கிடைக்கவில்லை. இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி, பலமுறை அதிகாரிகள் முன்னிலையில் தீக் குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. வீடு கிடைக்காத விரக்தியில் காவனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வந்திருந்தார். அங்கும் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு வேண்டும் என்று கேட்டார்.
இதற்கான விண்ணப்பம் முறையாக அனுப்பப்பட்டு பரிசீலணையில் உள்ளது. விரைவில் வீடு கிடைத்துவிடும். வீடு கிடைக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள்ஸ்ரீதர் பதில் அளித்துள்ளார்.
ஆனால் கலா, உடனே வீடு வேண்டும் என்று கோரி தீக்குளிக்கப் போவதாக பொதுமக்கள் முன்னிலையில் தெரிவித்து தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கலாவை தீக்குளிக்க விடாமல் தடுத்து, ஆறுதல் கூறி, திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் கிராம சபை கூட்டத்தின்போது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story