கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறித்து புதிய வழிகாட்டுதல் வெளியிடப்படும்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறித்து புதிய வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்
உப்பள்ளி: கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறித்து புதிய வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கொரோனா பரவல்
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக கொரோனா பரவல் சில மாநிலங்களில் குறிப்பாக மராட்டியம், கேரளா, டெல்லியில் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த 3 அலைகளால் ஏற்பட்டுள்ள அனுபவங்கள் அடிப்படையில் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
வருகிற 27-ந் தேதி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஒரு வழிகாட்டுதல் வெளியிடப்படும். பெங்களூருவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பாகிஸ்தானில் இருந்து அந்த மிரட்டல் வந்ததாக கூறப்படுவது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தேர்வு முறைகேடு
அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரிக்கப்படும். இதில் மத்திய அரசின் உதவியும் கேட்டுள்ளோம். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆடியோ உள்பட பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளோம்.
கர்நாடக மாதிரியில் நடவடிக்கை
உப்பள்ளி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. போலீஸ் நிலையம் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தொடர்புடைய வெளியாட்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் பின்னணியில் உள்ள அமைப்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
உப்பள்ளி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கர்நாடக மாதிரியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கட்சி மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story