ஊரக வளர்ச்சி துறையில் திட்டங்களை செயல்படுத்த உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும் தர்மபுரியில் சங்க மாநில பொதுச்செயலாளர் பேச்சு
ஊரக வளர்ச்சி துறையில் திட்டங்களை செயல்படுத்த உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் பாரி பேசினார்.
தர்மபுரி:
ஊரக வளர்ச்சி துறையில் திட்டங்களை செயல்படுத்த உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் பாரி பேசினார்.
மாவட்ட மாநாடு
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட மாநாடு தர்மபுரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அனந்தராம விஜியரங்கன், இளங்குமரன், சங்கர், சர்வோத்தமன், மாநில துணை தலைவர்கள் திருவேரங்கன், ஆறுமுகம், மாநில செயலாளர் சார்லஸ் சசிகுமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
சங்க மாநில பொதுச்செயலாளர் பாரி, மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஊரக வளர்ச்சி துறையில் தமிழக அரசு கொண்டுவரும் புதிய திட்டங்களை வரவேற்கிறோம். இந்த திட்டங்களை செயல்படுத்த உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்ள போதிய அளவில் ஊழியர்களை நியமிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த உரிய கட்டமைப்புகளை தேவையான அளவில் உருவாக்க வேண்டும்.
புதிய ஒன்றியங்கள்
ஊரக வளர்ச்சித்துறையில் பணி சார்ந்த நெருக்கடி காரணமாக ஊழியர்கள் ஓய்வின்றி பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும். ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணி, தர்மபுரி-மொரப்பூர் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி, தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி ஆகியவற்றை உடனடியாக தொடங்க வேண்டும். மாரண்டஅள்ளி, இண்டூர், தீர்த்தமலை ஆகிய பகுதிகளில் புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story